விமான நிலையத்தில் இருந்து கேட்வே ஆப் இந்தியா செல்ல 175 பெஸ்ட் மின்சார பஸ்களுக்கு மிக அதிக கட்டணம் நிர்ணயம்: பயணிகளும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு

மும்பை: பெஸ்ட் இயக்கும் பேட்டரியில் செயல்படும் மின்சார பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பயணிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான பெஸ்ட் நிறுவனம் மும்பை, தானே, மீரா-பயந்தர் மற்றும் நவிமும்பையில் பஸ் சேவையை நடத்துகிறது. பெஸ்ட் பஸ்களில் தினமும் சராசரியாக 25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். அதே போல மின்சாரமும் சப்ளை செய்கிறது. பஸ் சேவை மூலம் பெஸ்ட் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது. மின் வினியோகம் மூலம் கிடைக்கும் லாபத்தில்தான் பஸ் சேவையும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் பெஸ்ட் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மாநில சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே பேட்டரியில் இயக்கப்படும் 600 பஸ்களை சமீபத்தில் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்பிளக்ஸ், ஒர்லியில் உள்ள நேரு பிளனட்டோரியம், சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையம்,  ஆகிய இடங்களுக்கு பேட்டரியில் இயங்கும் மின் பஸ் சேவையை பெஸ்ட் தொடங்கியிருக்கிறது. ஆனால் மின்சார பஸ்களின் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். பொதுவாக விமான நிலையத்தில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு செல்ல சாதாரண பஸ்களில் கட்டணம் 5 முதல் 20 வரை வசூலிக்கப்படும். ஏ.சி.பஸ்களில் கட்டணம் 6 முதல் 25 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேட்டரியில் இயங்கும் பஸ்களில், விமான நிலையத்தில் இருந்து பாந்த்ரா குர்லா காம்பிளக்சுக்கு செல்ல 75 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரு பிளானட்டோரியம் செல்ல 125ம்,  சிஎஸ்எம்டி ரயில் நிலையத்துக்கு 150, கேட்வே ஆப் இந்தியாவுக்கும், டிரைடெண்ட் ஓட்டலுக்கும் செல்ல 175 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் மிக மிக அதிகம் என்று பயணிகள் கூறுகின்றனர். சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். மேலும் பஸ் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு எம்எம்ஆர்டிஏ-யின் (மும்பை பெருநகர் போக்குவரத்து ஆணையம்) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எம்எம்ஆர்டிஏ-யின் ஒப்புதல் பெறாமல் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களின் கட்டணத்தை பெஸ்ட் நிர்ணயித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஒப்புதல் இல்லாமல் கட்டணத்தை நிர்ணயித்திருப்பதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ரவி ராஜா கண்டித்துள்ளார். இந்த முடிவு அபத்தமானது என்றும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதாவினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: