ஐபிஎல் டி20 தொடர் இறுதி போட்டியில் இன்று சென்னை - கொல்கத்தா பலப்பரீட்சை: மகுடம் சூடப்போவது யார்?

துபாய்: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது.ஐபிஎல் போட்டியின் நடப்பு தொடர் இந்தியாவில் ஏப்.9ம் தேதி தொடங்கி 29 ஆட்டங்கள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் மே 2ம் தேதியுடன் இடைநிறுத்தப்பட்டது. எஞ்சிய 31 ஆட்டங்கள் செப்.19ம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.லீக் சுற்றில் முதல் 4இடங்களை பிடித்த டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. குவாலிபயர் 1ல் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த எலிமினேட்டரில் கொல்கத்தா 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது. அதனால் 2வது தகுதிச் சுற்றில் டெல்லி - கொல்கத்தா அணிகள் நேற்று முன்தினம் மோதின.

அதில் வெற்றி பெற்ற கொல்கத்தா...

3வது முறையாக ஐபிஎல் பைனலில் இன்று விளையாடுகிறது. ஏற்கனவே 2012, 2014 பைனலில் விளையாடி கோப்பையை கைப்பற்றியுள்ளதால், 3வது முறையும் பட்டம் வெல்லும் நம்பிக்கையுடன் இன்று களம் காண்கிறது. அந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பது போல் அணியிலும் கில், வெங்கடேஷ், நிதிஷ், சுனில், தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, சிவம் மாவி என திறமையான வீரர்கள் உள்ளனர். காயம் காரணமாக விலகியிருக்கும் ரஸ்ஸல் களம் இறங்கினால் அணிக்கு கூடுதல் வலுவாக இருக்கும். ஒருநாள் உலக கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணியின் சாம்பியன் இயான் மார்கன் தான் கொல்கத்தாவின் கேப்டன். தினேஷிடம் இருந்து பிடுங்கிதந்த கேப்டன் பொறுப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். கூடவே அவரும் ஆடினால் சென்னைக்கு சிக்கல்தான். சென்னை உற்சாகம்: 9வது முறையாக பைனலில் விளையாட உள்ள சென்னை அணி, 4வது முறையாக கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. சென்னை ஏற்கனவே 2010, 2011, 2018ல் கோப்பையை வசப்படுத்தியுள்ளது. அந்த அணி 4 வது முறையாக கோப்பையை வெல்ல தகுதியான வீரர்கள் அணியில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

சென்னை-கொல்கத்தா நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அதில் சென்னை 16 ஆட்டங்களிலும், கொல்கத்தா 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.அதுமட்டுமல்ல இந்த இரு அணிகளும் 2012 தொடரின் இறுதி ஆட்டத்தில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 5 விக்aகெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை முதல்முறையாக முத்தமிட்டது.அதிகபட்சமாக சென்னை 220 ரன்னும், கொல்கத்தா 202 ரன்னும் குவித்தன. குறைந்தபட்சமாக சென்னை 114 ரன்னிலும், கொல்கத்தா 108 ரன்னிலும் சுருண்டுள்ளன.நடப்புத் தொடரில் ஏப்.21ம் தேதி நடந்த 15வது லீக் ஆட்டத்தில் 18 ரன் வித்தியாசத்திலும், செப்.26ம் தேதி நடந்த 38வது லீக் ஆட்டத்திலும் 2 விக்கெட் வித்தியாசத்திலும் சென்னைதான் வென்றது.

Related Stories:

More
>