சாத்தூர் அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த சுமைதாங்கி கற்கள் கண்டெடுப்பு

சாத்தூர்: சாத்தூர் அருகே கி.பி 18ம் நூற்றாண்டை சேர்ந்த 2 சுமைதாங்கி கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் உமா, பேராசிரியர் சிந்து ஆகியோர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஊமத்தம்பட்டி அருகே மங்கம்மாள் சாலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 300 ஆண்டுகள் பழமையான 2 சுமைதாங்கி கற்கள் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘பொதுவாக சுமைதாங்கி கல் என்பது நிறைமாத கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது வயிற்றில் குழந்தையோடு இறந்து விட்டால் அவர்களது நினைவாக வைக்கப்படுவது. இப்பகுதியில் கண்டறியப்பட்ட சுமைதாங்கி கல், தமிழ் வருடம் 1511, மாசி மாதம் சாத்தூருக்கு அருகில் இருக்கும் உப்பத்தூரில் பிரசவத்தில் இறந்து போன கர்ப்பிணி கச்சம்மாள் என்பவருக்கு செய்துள்ளனர். மற்றொரு கல் தமிழ் வருடம் 1416 ஆவணி 12ம் தேதி உப்பத்தூரில் இருக்கும் கர்ப்பிணிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் கணவன், மனைவி பெயர் சிதைந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற சுமைதாங்கி கற்களை இன்றும் நாம் காணலாம்’’ என்றனர்.

Related Stories: