×

மகளிர் டென்னிசில் புதிது புதிதாய் முளைக்கும் நட்சத்திரங்கள்: நிலைத்து நின்று ஜொலிப்பார்களா?

டென்னிஸ் உலகில் தலைசிறந்த நட்சத்திர வீரர், வீராங்கனைகள் உருவாகி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்துவது வாடிக்கையான ஒன்று. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போர்க், மெக்கன்ரோ, சாம்ப்ராஸ், கானார்ஸ், பெக்கர் கொடிகட்டிப் பறந்த காலம் முடிவுக்கு வந்து, கடந்த 15 ஆண்டுகளாக ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவாக் ஜோகோவிச் என மும்மூர்த்திகளின் உறுதியான உடும்புப் பிடி இன்னமும் தளராமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பெடரர், நடால் இருவரும் காயம் காரணமாக நடப்பு சீசனில் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றாலும், ஜோகோவிச் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று இளம் வீரர்களுக்கு சவாலாக விளங்கினார்.அடுத்த ஆண்டும் இவர்களின் ஆதிக்கம் நீடிக்குமா? என்பது கேள்விக்குறி தான். மெட்வதேவ், அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் தீம், பெரட்டினி என்று இளைஞர் பட்டாளம் வரிசை கட்டுகிறது. ஆனாலும், மும்மூர்த்திகள் முனைப்புடன் தங்கள் கிராண்ட் ஸ்லாம் வேட்டையை தொடர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

அதே சமயம், மகளிர் ஒற்றையர் பிரிவில் நவ்ரத்திலோவா, ஸ்டெபி கிராப், மார்டினா ஹிங்கிஸ், மரியா ஷரபோவா, செரீனா, வீனஸ் போன்றவர்களின் ஆதிக்கம் முடிந்த நிலையில், தற்போது ஒவ்வொரு போட்டியிலும் புதிது புதிதாக இளம் நட்சத்திரங்கள் உருவாகி ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஹாலெப், ஒசாகா, பிளிஸ்கோவா, அசரெங்கா, குவித்தோவா, ஆஷ்லி பார்டி போன்றவர்கள் தொடர்ச்சியாக சில போட்டிகளில் வென்று தரவரிசையில் முன்னிலை வகித்தாலும், பெயரே கேள்விப்படாத 150வது 200வது ரேங்க் வீராங்கனைகள் எல்லாம் திடீரென அமர்க்களமாக விளையாடி புகழ் வெளிச்சத்தின் கீழ் மிளிர்கிறார்கள்.சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பதின்ம வயது வீராங்கனைகள் எம்மா ரடுகானு (18 வயது, இங்கிலாந்து), லெய்லா பெர்னாண்டஸ் (19 வயது, கனடா) மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விறுவிறுப்பான பைனலில் வென்று சாம்பியனான ரடுகானு ஒரே நாளில் உலகப் பிரபலமாகிவிட்டார். அபாரமான ஆட்டத் திறனோடு இவர்கள் அழகு தேவதைகளாகவும் இருப்பதால், விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன. ரடுகானுவின் இன்றைய சந்தை மதிப்பு ஆயிரம் கோடி என்கிறார்கள்.

இப்படி புதிதாய் உருவாகும் நட்சத்திரங்கள், தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் தங்களின் வெற்றிப் பயணத்தை தொடரத் தவறிவிடுகிறார்கள். இண்டியன் வெல்ஸில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபனில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய எம்மா, லெய்லா இருவருக்குமே ஏமாற்றமே மிஞ்சியது. எம்மா தனது முதல் சவாலிலேயே மண்ணைக் கவ்வ, லெய்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினார். போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் மிகத் திறமையான வீராங்கனையாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்கும் அந்த ‘மாயாஜாலம்’ கை வராமல் தடுமாறவே செய்கிறார். செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, அமெரிக்காவின் கோகோ காஃபும் இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.

ஹடாட் மாயா (பிரேசில், 115வது ரேங்க்), அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச் (பெலாரஸ், 100வது ரேங்க்) போன்றவர்கள் இண்டியன் வெல்ஸில் முன்னணி வீராங்கனைகளுக்கு ‘தண்ணி காட்டி’ கவனம் ஈர்த்திருக்கிறார்கள். மொத்தத்தில், மகளிர் ஒற்றையர் பிரிவில் நடக்கும் ஒரு போட்டியில் இவர் தான் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை மாறி, தரவரிசையில் மிகவும் பின்தங்கியவர்கள் மற்றும் டீனேஜ் வீராங்கனைகளும் சாம்பியனாக முடிவது ஆரோக்கியமானதே.ஆனால், இந்த புதிய நட்சத்திரங்கள் நிலைத்து நின்று ஜொலிப்பார்களா? அல்லது ‘எரி நட்சத்திரமாக’ ஒரு சில போட்டிகளுடன் காணாமல் போவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திடீரென கிடைக்கும் அபரிமிதமான புகழ், பணம் காரணமாக விளையாட்டின் மீதான கவனம் சிதறுவதை தவிர்த்தால் நிச்சயம் இவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியும்.

Tags : In women's tennis New brand new Emerging stars: Will they stand still and shine?
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...