பழநி- கொடைக்கானல் மாற்றுப்பாதை திட்டம் உயிர் பெறுமா...?

பழநி : பழநி-கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தின்  முக்கிய கோடை வாசஸ்தலமாக விளங்குவது கொடைக்கானல். இங்கு வருடம் முழுவதும்  சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பர். கொடைக்கானல் வரும் சுற்றுலா  பயணிகள் பெரும்பாலும் பழநி- கொடைக்கானல் சாலையையே பயன்படுத்துவர். இச்சாலை  14 கொண்டை ஊசி வளைவுகளுடன் 65 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாக உள்ளது.

கேரளா,  கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மேற்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்து வரும்  சுற்றுலா பயணிகள் பழநி வழியாக செல்லும் சாலையையே பயன்படுத்துகின்றனர்.  இதுபோல் மதுரை மார்க்கமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள்  வத்தலக்குண்டு சாலையை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

இந்த 2  சாலைகளும், பெருமாள் மலையில் இணைகின்றன. சீசன் காலங்களில் கொடைக்கானலில்  இருந்து பெருமாள் மலை வரை போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படுவது வழக்கம்.  மேலும், மழை காலங்களில் பழநி, வத்தலக்குண்டு சாலைகளில் ஏற்படும்  நிலச்சரிவுகளால் போக்குவரத்து பல நாட்களுக்கு துண்டிக்கப்படுவது  வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட  நிலச்சரிவால் சுமார் 1 வருடம் இச்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதனால்  சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கொடைக்கானல் சாலையின் இடைப்பகுதியில் உள்ள  மலைக்கிராம மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இதுகுறித்து  திருப்பூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் கூறியதாவது, ‘கடந்த 1965ம் ஆண்டு  பழநி- கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை முன்மொழியப்பட்டது. பொருந்தலாறு ஜீரோ  பாயிண்ட்டில் இருந்து பள்ளங்கி, வில்பட்டி வழியாக கொடைக்கானலுக்கு  வழித்தடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின், இத்திட்டம்  கைவிடப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த வழியாக பாதை அமைப்பது  போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், இதன் வழித்தட தூரம் சுமார் 18 கிமீ  அளவே உள்ளதால் பயண நேரமும் குறைகிறது. அதுபோல் ஒருவழிப்பாதையாக மாற்றினால்  விபத்து அபாயமும் குறையும்.

மேலும், தற்போது கொடைக்கானல் நகரம் பழநி  சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள பல்வேறு மலை  கிராமங்களும் பழநி நகருடன் இணைக்கப்படும். இங்கு விளைவிக்கப்படும்  பிளம்ஸ், கேரட், பேரிக்காய் உள்ளிட்டவைகளை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்ல  இச்சாலை ஏதுவாய் இருக்கும். மேலும், நிலச்சரிவு போன்ற காலங்களில்  போக்குவரத்து தங்கு தடையின்றி இருக்கும். எனவே, அரசு துரித நடவடிக்கை  எடுத்து வனத்துறையிடம் அனுமதி பெற்று இச்சாலை அமைக்க முன்வர வேண்டும்’  என்றார்.

Related Stories: