டெல்லியை போராடி வென்றது பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா

ஷார்ஜா: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான குவாலிபயர்-2 ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன் (39 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 30 ரன் (27 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் மாவி, லோக்கி பெர்குசன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. சுப்மன் கில், வெங்கடேஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்து அபார தொடக்கம் தந்தது. வெங்கடேஷ் 55 ரன் (41 பந்து) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரானா 13 ரன்னில் வெளியேறினார். சுப்மன் கில் 46 ரன் (46 பந்து) எடுத்து அவேஸ்கான் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன் என இருந்தது.

20 பந்தில் வெறும் 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரபாடா வீசிய 18வது ஓவரில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார்.

அடுத்து வந்த மார்கன் டக் அவுட்டாக, அஷ்வின் வீசிய கடைசி ஓவரில் 7 ரன் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில், ஷாகிப் அப் ஹசன், சுனில் நரேன் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகினர். கடைசி 2 பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியது. இதில் 5வது பந்தில், திரிபாதி சிக்சர் அடித்து, கேகேஆரின் டென்ஷனுக்கு முடிவு கட்டினார். கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Related Stories: