×

லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை: 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை வேண்டும்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு

புதுடெல்லி: ‘லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து, உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு கொடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் 4 விவசாயிகள் காரை ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் மகன், ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில்,  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று, அவருடைய மாளிகைக்கு சென்று சந்தித்தனர்.  

அப்போது, லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினர். அதில், ‘கடந்த 3ம் தேதி உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சல் காரணமாக, பட்டப்பகலில் விவசாயிகளை உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்றுள்ளார். இந்த பிரச்னையில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை போல், நீங்களும் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பீர்கள் என நம்புகிறோம். மேலும், புதிய வேளாண் சட்டங்கள் தங்களை பாதிக்கும் என அறிந்து கொண்டுள்ள விவசாயிகள், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மழை, குளிர், வெயில் என அனைத்தையும் தாங்கி கொண்டு டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தால் ஆயிரம் விவசாயிகளுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், தங்களின் போராட்டம் ‘காந்தி வழியிலே’ என இன்று வரையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம் அறிவித்த போது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோக்கள் இன்றளவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆகவே, கடந்த 3ம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது திட்டமிட்ட ஒன்றே என்பது நிரூபணமாகி உள்ளது. மேலும், அமைச்சரின் பெயரில் உள்ள கார்களே விவசாயிகள் மீது மோதியதும், காருக்குள் அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததையும் பலர் நேரில் கண்டுள்ளனர். இவ்விவகரத்தில் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு உபி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தாலும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பதை ஆராய வேண்டும். ஆனால், அவர் பதவியில் தொடர்ந்து நிடித்தால் அதனை ஆராய்வது கடினம்.  ஏனெனில், ஒன்றிய உள்துறை அமைச்சரை சாதாரண குற்றவாளியை எந்த போலீசார் விசாரிக்க துணிவார்கள்? அதனால், ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருக்கும் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உறுதி
ஜனாதிபதியை சந்தித்த பிறகு ராகுல் உள்ளிட்டோர், ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியை  சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். முக்கியமாக, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியில் நீடித்தால் விசாரணை முழுமையாகவும், முறையாகவும் நடைபெறாது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம். இது பற்றி அரசுடன் ஆலோசிப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்,’ என்றனர்.

ஆசிஷ் நண்பரிடம் விசாரணை
லக்கிம்பூர் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவின் நெருங்கிய நண்பர் அங்கிட் தாஸ். இவர் நேற்று குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு விசாரணை குழுவின் முன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் லக்கிம்பூர் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காருக்கு பின்னால் வந்த கார், அங்கிட் தாசுக்கு சொந்தமானதாகும்.

Tags : Lakhimpur farmers massacre ,Supreme Court ,Congress ,President , Farmers, Assassination, President, Congress Leaders, Petition
× RELATED லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. உ.பி....