சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மலைகளின் அரசி

நீலகிரி என்னும் மலையின் பெயராலேயே நீலகிரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்கள் என்றால் அனைவருக்கும் தெரிந்திருப்பது ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகியவை ஆகும். இவை தவிர்த்து, இன்னும் பல இடங்கள் நீலகிரி மாவட்டத்தில் காணவேண்டிய பகுதிகளாக இருக்கின்றன. அதுபற்றிய ஒரு மினி பார்வை...

* ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய ஊர்களில் மிகவும் பிரபலமான நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

* கல்லட்டி நீர் வீழ்ச்சி, காட்டேரி அருவி, லாஸ் அருவி, கேத்தரின் நீர்வீழ்ச்சி என நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் இந்திய அளவில் பிரபலமானவையாகும்.

* நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா அணை, சாந்தி நல்லா நீர்த்தேக்கம், காமராசர் நீர்த்தேக்கம் ஆகியன முக்கியமான அணைகளாக விளங்குகின்றன.

* முதுமலை தேசியப்பூங்கா, யானைகள் புத்துணர்வு முகாம், பைக்காரா, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மலை ரயில் பயணம், படகு ஏரி, பனி ஏரி, தொட்டபெட்டா, சிம்ஸ்பார்க், அரண்மூர் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.

* எமரால்டு ஏரி, கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, கொடநாடு காட்சி முனையம், டால்பின் மூக்கு, ஜீன்பூல் சூழல் பூங்கா ஆகியவையும் நீலகிரி மாவட்டத்தின் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களாக விளங்குகின்றன.

* நீலகிரி மலை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து சிறப்பித்துள்ளது. இதனால் உலகம் முழுக்க தெரிந்துகொள்ளும் பெயராக இந்த காலக்கட்டத்தில் வளர்ந்துள்ளது ஊட்டி. இது நீலகிரிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கிறது.

* நீலகிரி மலைப்பகுதி வெறுமனே சுற்றுலாவுக்காக மட்டும் இல்லாமல், இங்கு பழங்களின் விளைச்சல் மிகவும் அமோகமாக இருக்கிறது.

* கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் மிளகு, சில்வர் ஓக், பாக்கு, காபி, பலா, குரோட்டன்ஸ், மலேயன் ஆப்பிள், ஜாதிக்காய் விளைகிறது. பர்லியார் பண்ணையில், கிராம்பு, ஜாதிக்காய், ரோஸ் ஆப்பிள், பாக்கு, மணிபிளாண்ட், குரோட்டன்ஸ், சில்வர் ஓக், காபி, துரியன், லவங்கப் பட்டை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

* காட்டேரி பண்ணையின் முக்கிய உற்பத்தி பொருள்களாக ரோஸ்மேரி, ரோஜா மொட்டு செடிகள், அழகு தாவரங்கள், எலுமிச்சை நாற்றுகள், சில்வர் ஓக் உள்ளிட்ட மரக்கன்றுகள் ஆகியவை இருக்கின்றன.

* குன்னூர் பழவியல் நிலையம், பலதரப்பட்ட அரிய பழங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறது. எடுத்துக்காட்டாக பிளம், பேரி, ஆப்பிள், மாதுளம் பழ நாற்றுக்கள் அதிகம் உள்ளன. குன்னூர் சிம்ஸ்பூங்காவில், மரக்கன்றுகள், சாம்பிராணி, போடோகார்பஸ் போன்ற மரக்கன்றுகள், அழகு தாவரங்கள், மலர் விதைகள் கிடைக்கிறது.

* ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இதுபோன்ற பல செடிகள் வளர்க்கப்படுகின்றன. ரோஜா செடிகள், அழகு தாவரங்கள், கேக்டஸ் ரகங்கள், மலர் விதைகள், ரோஜா கன்றுகள், சாம்பிராணி மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள் உள்ளிட்டவை இவற்றில் முக்கியமானவையாகும்.

* தொட்டபெட்டா பகுதியில் இருக்கும் பண்ணையில் தேயிலை நாற்றுகளும், தும்மனட்டி என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பண்ணையில் தரமான அர்கா கோமல் பீன்ஸ் விதைகளும், நஞ்சநாடு பண்ணை பகுதியில் உருளைக்கிழங்கு விதைகளும் கோல்கிரேன் பண்ணையில் உருளைக்கிழங்கு, தேயிலை நாற்றுகளும் கிடைக்கின்றன.

* தேவாலா பண்ணையில் சில்வர் ஓக் நாற்றுகள், காபி, பாக்கு, தேயிலை மற்றும் மிளகு நாற்றுகள். குன்னூர் பழம் பதனிடும் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, கல்லாறு, பர்லியார், சேரிங்கிராஸ் தோட்டக்கலை வணிக வளாகம் மற்றும் ரோஜா பூங்காக்களில், குன்னூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஜாம், ஜெல்லி, பழரசம், ஊறுகாய் விற்பனை செய்யப்படுகின்றன.

* ஊட்டிக்கும் சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் இதமான வானிலையை அனுபவிக்கவே செல்கின்றனர். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல அதிக அளவில் கோயில்களை இங்கு எதிர்பார்க்கமுடியாது. ஆனால், சில கோயில்கள் தமிழக அளவில் புகழ் பெற்றுள்ளன. ஊட்டி சந்தைக்கடை பகுதியில் அமைந்துள்ள ஊட்டி மாரியம்மன் கோவில் பிரபலமானதாகும்.

* மஞ்சக்கம்பையில் அமைந்திருக்கும் நாகராஜர் ஹெத்தையம்மன் கோயில், பொக்காபுரம் மாரியம்மன் கோயில், காந்தள் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடன் அமர்ந்த காசி விஸ்வநாதர் கோயில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடன் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், வேணுகோபாலசுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோயில் என சிறிய வகை கோவில்களும் ஊட்டி பகுதியில் காணமுடிகிறது.

* ஊட்டிக்கு பயணம் செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்கும் ஒரு பகுதி, ஊட்டி ஏரி ஆகும். இங்கு படகு பயணம் மறக்க முடியாத நினைவாக அமையும். செயற்கையாக உருவாக்கப்பட்ட ஊட்டி ஏரி 2.5 கி.மீ. நீளமும், 140 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் பரப்பளவு 3,885 சதுர கி.மீ. ஆகும். ஊட்டி ஏரி பகுதியில்தான் பேருந்து நிலையம், படகு பயண நிலையம், குதிரை பந்தய திடல், கரையில் தொடர்வண்டி பாதை ஆகியவை உள்ளன. மே மாதத்தில் படகு போட்டி இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன.

* ஊட்டி குதிரைப்பந்தயத் திடல் பிரபலமானது. கோடைக் காலங்களில் நடத்தப்படும் குதிரை பந்தயங்களுக்கான திடல் இதுவாகும். இது ஊட்டி தொடர்வண்டி நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மே மாதங்களில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் கவனத்தை இது ஈர்க்கிறது.

* பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் விரிந்துள்ள இந்த பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும்.

* அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன.

* பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.

* நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது.

* 19-ம் நூற்றாண்டின்போது இந்த பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்த பெயர் அமைந்தது.

* சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி.

* ஏரியை சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.

* எமரால்டு ஏரி ஊட்டி சுற்று வட்டாரத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். எமரால்டு ஏரியில் உள்ள பல்வேறு மீன்களாலும், இங்கு காணப்படும் பறவைகளாலும் பிரபலமானது. எமரால்டு ஏரிக்கு அருகில் இருந்து கதிரவன் தோற்றத்தையும், மறைவையும் காணுவது கண்ணுக்கினிய காட்சி என அறியப்படுகிறது. எமரால்டு ஏரியை சுற்றி தேயிலை தோட்டங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு, தேயிலை பொருட்கள் வாங்க முடியும்.

Related Stories: