×

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை இல்லை போலீசுக்கு நடிகை நிலா கண்டனம்

மும்பை: கொலை மிரட்டல் விடுத்த மும்பை வடிவமைப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு செய்து 2 மாதங்களாகியும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, போலீசுக்கு நடிகை நிலா கேள்வி கேட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான நடிகை மீரா சோப்ரா, நிலா என்ற பெயரில் தமிழில் அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை, கில்லாடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மும்பை வடிவமைப்பாளர் ரஜிந்தர் திவான் என்பவர் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பை போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதில், ‘மும்பை அந்தேரி பகுதியிலுள்ள என் புதிய வீட்டை வடிவமைப்பாளர் ரஜிந்தர் திவானுக்கு 17 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தில் வாடகைக்கு விட்டிருந்தேன். ஒப்பந்த தொகையில் பாதி பணத்தை மட்டுமே அட்வான்ஸ் கொடுத்தார். அவரை சந்தித்து மீதி பணம் கேட்டபோது, வாக்குவாதம் செய்ததுடன், தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தினார். கொலை மிரட்டலும் விடுத்தார். என் வீட்டில் இருந்துகொண்டு, என்னையே வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டார்.
அவரது பணியாளர்களை வைத்து என்னை அச்சுறுத்தினார். பிறகு அந்த வீட்டில் தங்காமல் மாயமானார். எனக்கு கொடுக்க வேண்டிய தொகையையும் தரவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட எப்ஐஆரின்படி ரஜிந்தர் திவான் மீது மும்பை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நிலா குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நீங்கள் வசிக்கும் இடத்தில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அவர்களுக்கான பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், சட்டத்தை பாதுகாப்பவர்கள் எதற்காக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்? தனியாக வசிக்கும் பெண்ணை (என்னை) பாதுகாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அந்த பதிவை மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம், அமைச்சர் ஆதித்யா தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.

Tags : Nila , Actress Nila condemns police for not taking action against the person who made the death threat
× RELATED கல்பாக்கம் அணுமின் நிலைய...