பேட்டிங்கில் டெல்லி திணறல்: கொல்கத்தாவுக்கு 136 ரன் இலக்கு

ஷார்ஜா: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான குவாலிபயர்-2 ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 136 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரித்வி, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 32 ரன் சேர்த்தது. பிரித்வி 18 ரன் எடுத்து (12 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) வருண் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து தவானுடன் ஸ்டாய்னிஸ் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தனர். ஸ்டாய்னிஸ் 18 ரன், தவான் 36 ரன் (39 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, டெல்லி ஸ்கோர் வேகம் மட்டுப்பட்டது. ஒரு முனையில் ஷ்ரேயாஸ் அய்யர் உறுதியுடன் போராட... கேப்டன் ரிஷப் பன்ட் 6 ரன், ஷிம்ரோன் ஹெட்மயர் 17 ரன் (10 பந்து, 2 சிக்சர்) எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஷ்ரேயாஸ் 30 ரன் (27 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), அக்சர் படேல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் மாவி, லோக்கி பெர்குசன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>