×

நீட் தேர்வு சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நிலையில் தமிழக கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: ஜனாதிபதிக்கு விரைவாக பரிந்துரைக்க கோரிக்கை

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். நீட் தேர்வுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிலே கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர்.

இந்தக் குழு பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டுப் பெற்றது. மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு 14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது.

அந்தப் பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டியிருந்தன. மேலும், 2006ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசு தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்று இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு சட்டப்பேரவையதில் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுதற்காக, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக, தமிழக கவர்னருக்கு சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்தை கவர்னர் பரசீலனை செய்து வருகிறார். இதுவரை முடிவு எடுக்கவில்லை. இதனால் விரைவாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் மூத்த அமைச்சர்கள் இருந்தனர்.

Tags : MK Stalin ,Governor of Tamil Nadu ,President , MK Stalin's meeting with the Governor of Tamil Nadu after the passage of the NEET Examination Act in the Legislature: Request for a speedy nomination to the President
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...