குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் ஊராட்சி தலைவராக கர்ப்பிணி பெண் தேர்வு: கணவன்-மனைவி வெற்றி

குன்றத்தூர்: குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஒரு கர்ப்பிணி பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், அதிமுகவை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக, உள்ளாட்சி தேர்தலில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. இதில் திமுக, அதிமுகவை சேர்ந்த பலரை அதிகளவில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கு மக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு அதிமுக கட்சி சார்பில் நந்தினி மேத்தா (23) என்பவர் 625 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இளவயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார். இதேபோல், குன்றத்தூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட படப்பை மனோகரனும், 18-வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி சரஸ்வதியும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்அமுதனும், 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழி தமிழ்அமுதனும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, கொளப்பாக்கம் 8-வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏசுபாதமும், கொளப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி மாலதி ஏசுபாதமும் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, அதிமுக என 2 கட்சி வேட்பாளர்களான கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Related Stories: