குழந்தைகளுக்கு ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் தேவையா?

எதிர்மறையாக இப்படி தலைப்பு வைக்க மன்னிக்கவும். நம் அடுத்த தலைமுறையின் மீது அக்கறை இருப்பதாலேயே இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டியதாக இருக்கிறது.பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்காக அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள், காய்கறி, பழங்கள் என்று பார்த்து பார்த்துச் செய்கிறோம்.  இன்றைய அவசர வாழ்வு முறையிலும், அழுத்தும் படிப்புச்சுமையிலும் இருந்து பிள்ளைகளின் மன ஆரோக்கியத்துக்கு என்ன செய்கிறோம்? ஒரு நிமிடம் யோசிக்கலாமே!டிவி, வீடியோ, செல்போன் விளையாட்டுகள் சுட்டிகளின் அத்தனை குழந்தைத் தன்மைகளையும் அழித்துத் தின்றுவிடும் கரையான்களாக மாறிவிட்டன. பிள்ளைகளின் க்ரியேட்டிவிட்டியை சுற்றி கரையான் புற்றுகள். எதற்கெடுத்தாலும் கோபம், பிடிவாதம் வேறு! மிகப்பெரிய அளவில் மாறிவிட்ட நம் வாழ்வு முறையும் அதற்குக் காரணம் என்பதை நாம் அறிவோமா?

ஊர் பக்கம் ஒரு சொல்வழக்கு உண்டு...

‘அவரைய போட்டா துவரையா விளையும்’ என... அதுபோலத்தான் இதுவும். எப்படி நாம் வரையறுத்துக் கொடுக்கிறோமோ, பிள்ளைகள் அதையேதானே

எதிரொலிப்பார்கள்?நாளெல்லாம், படிப்பு, டியூசன், எக்ஸ்ட்ரா வகுப்புகள், கோச்சிங் கிளாஸ்... வேறு வழியில்லை தான்... என்றாலும் வார இறுதியிலாவது அவர்களுக்கான நேரங்களை நாம் தரலாமே!‘அதான் நாங்க வாராவாரம் ஷாப்பிங் மால், ரெஸ்டாரன்ட் போவோமே’ என்று சொன்னால் அங்குதான் நாம் தவறு செய்கிறோம். திரும்பவும் அதே காங்கிரீட் கட்டிடங்களுக்குள், வாங்க முடியாத பல ஏக்கங்களையும் வளர்த்து விட்டு, சென்றதற்கான எந்தத் திருப்தியும் இல்லாமலும் அவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கி, ஒருவித வெறுப்புடனே கூட்டி வருகிறோம். ஒரு ஷாப்பிங் மால் வாசலில் அமர்ந்து கவனித்துப் பாருங்க ளேன்... எத்தனை பேர் மிக மகிழ்ச்சியுடன் - அதிலும் எத்தனை குழந்தைகள் முகமெல்லாம் குழந்தைமை பூத்த சிரிப்புடன் வெளியேறுகிறார்கள்?

குழந்தைகளை இயற்கையுடன் இயைந்து குழந்தைகளாக வளர்வதை, இந்த ஷாப்பிங் மால் கலாசாரம் வெகுவாக மாற்றி வைத்திருக்கிறது. எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டுக் காரனின் வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்கள், அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் ஏனோ கற்றுக்கொள்வதேயில்லை. அவர்களது முதல் தேர்வு விலங்கியல் தோட்டங்களும், பூங்காக்கள், கடற்கரைகளுமே!வார இறுதியை இயற்கையுடன் கழிக்கும் மனநிலை நம்மிடம் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு பூ மலர்வதை, புலித்தோலின் மினுமினுப்பை, மகரந்தங்களின் வாசனையைக்கூட இணையத்தின் வழி மட்டுமே இன்றைய பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையே மிகுகிறது.

‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் துரித உணவிலிருந்து பிள்ளைகளைக் காக்க எத்தனையோ வித உணவுகளை ஆரோக்கியமாக வீட்டிலே செய்ய கற்பது இன்றைய நவீன தாய்மார்களுக்கு மிக அவசியம். பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க குடும்ப நேரம் ஏற்படுத்துவதும், அதை நல்ல முறையில் வகுத்துத் தருவதும் அதே அளவு முக்கியம்.

சிறுவர் பூங்கா, உயிரியல் பூங்காக்கள் ஆகியவை மட்டுமல்ல... நம் கலாசாரங்களைத் தெரிந்து கொள்ளவென அமைக்கப்பட்ட எத்தனையோ இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் வார இறுதியில் பிள்ளைகளை அழைத்துச்செல்லத் திட்டமிடுங்கள். தேவையான தண்ணீர் போன்றவற்றை எடுத்துச்செல்ல அவர்களையே பழக்குங்கள். அவர்களுக்கென ஒரு பையோ, ‘பேக் பேக்’கோ கொடுத்து, அதில் தண்ணீர், தின்பண்டங்கள், சிறிய நோட்டு, பென்சில், பந்து, பறக்கும் தட்டு மற்றும் விருப்பப்பட்டதை எடுத்து வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். இதன் மூலம் ஒரு இடத்துக்குச் செல்வதற்கான திட்டமிடுதல் முறையும் அதனைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று திரும்புதலையும் கற்றுக்கொள்வார்கள்.

பூங்காக்களில், விளையாடும் இடங்களில் அவர்களை அவர்களுக்கே உரித்தான குழந்தைமையுடன் விளையாட விடுங்கள். இயன்ற அளவு நீங்களும் இழந்துவிட்ட உங்கள் குழந்தைப்பருவத்தை மீட்டெடுத்து, அவர்களுக்கு இணையாக பேசி, சிரித்து விளையாடுங்கள். புல்லின் நுனியில் பட்டாம்பூச்சியை வியந்து பார்க்கச் செய்யுங்கள்... தாவிச்செல்லும் அணிலின் வால் முடியை ஒரு காலத்தில் பெயின்ட் பிரஷ்களுக்கு பயன்படுத்திய தகவல் சொல்லுங்கள்... இப்படி சின்னச் சின்னதாகச் சொல்லுங்கள்.‘ஷாப்பிங் மால் போனோம்’, ‘காஃபி ஷாப் போனோம்’ என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் பெருமையடித்துக் கொள்வதை விட நம் அருமை பிள்ளைகளின் சந்தோஷமும், அவர்களிடம் நாம் கொள்ளும் நெருக்கமும் மட்டுமே நிரந்தர பெருமை தேடித்தரும்.பூங்காவில் இருந்து ஒரு பலூனுடனோ, அங்கு மலர்ந்து உதிர்ந்த ஒரு பூவுடனோ, சருகுடனோ உங்கள் பிள்ளை வெளியே வரும்போது சிரிப்பும் நிறைவும் முகாமிட்டிருப்பதை நிச்சயம் காண்பீர்கள். சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!

Related Stories: