குளிர்கால கொண்டாட்டம்

நன்றி குங்குமம் தோழி

காலையில் சூரிய வெளிச்சம் தெரிவது போன்று இருக்கும். ‘ஆஹா என்ன ஒரு வெளிச்சம், இன்றைக்கு சூப்பர் வெதர்’ என்று சொல்லிக்கொண்டே சூடான காபியை பருக ஆரம்பிப்போம். அந்தக் காபியை குடித்து முடிப்பதற்குள் இயற்கைச் சூழலே மாறலாம். ஒன்று, காபி குடிக்க எடுக்கும் நேரம் அதிகம். ‘காபி’யை அவ்வளவு ரசித்து சிறிது சிறிதாகக் குடித்து மீதம் வைத்து, சில நிமிடங்கள் கழித்துத்தான் மீண்டும் குடிக்க ஆரம்பிப்பார்கள்.

மற்றொன்று, எந்த நேரமும் எந்த இயற்கை நிகழ்வும் ஏற்பட வாய்ப்புண்டு. ‘மால்’களில் நிறைய பேர் ‘காபி’ அருந்திக்கொண்டே நடந்து செல்வார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாகக் கூட இருக்கலாம். ஒரு சிலர் வீட்டிற்கு வரும்பொழுது, அவர்களுக்கு ‘காபி’ வேண்டுமா என்றால்.. அவர்கள் கையில் இருக்கும் ‘காபி’ கப்பை காட்டுவார்கள்.

அர்த்தம் என்னவென்றால், ரொம்ப நேரமாகவே அவர்கள் காபிதான் குடித்துக் கொண்டிருக்கிறார்கள், அதில் பாக்கியும் இருக்கிறது. அதனால் இப்பொழுது வேண்டாம். ‘ஓஹோ! இதில் இவ்வளவு விஷயமா!’ என்று நீங்கள் நினைக்கலாம். சுடச்சுட ‘பில்டர் காபி’யை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து சாப்பிடுவார்கள். ஒவ்வொரு தடவை அருந்திவிட்டு, மீண்டும் ஆற வைத்து வெகுநேரம் அந்த ஒரு காபியை குடிப்பார்கள். ‘ஐயோ, காபி ஆறிப்போகிறதே? என்ற அங்கலாய்ப்பு ஏற்படும். ஆனால் அவர்கள் ரசித்து-மிகப் பொறுமையுடன் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதுதான் வழக்கம்.

சாரல் சாரலாக சிறிய அளவுகளில் பஞ்சுத் துகள்கள்போல், சிறிய முல்லை மொட்டுக்கள்போல பூமியில் சிதறி விழுந்தன. கொஞ்ச நேரத்தில் சாரல் பெரிதாக மாற இடைவிடாது துகள்கள் விழுந்துகொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தரையில் ஒரு அடி, இரண்டு அடி என பனித்துகள்கள் சேர்ந்துவிட்டன. பின் மரங்கள்-கிளைகள் ஆட காற்றுடன் பனிமழை தொடங்கியது.

மாலையில் வீட்டின் வெளிப்பக்கக் கதவு  உறைந்து விட்டது. நடைபாதைக்கும், புல்தரைக்கும் வித்தியாசமின்றி ஒரே ஐஸ் பாதையாகக் காட்சியளித்தது. வழக்கம்போல் கார்களும் உறைந்துவிட்டன. வீட்டின் ஒரு பகுதி கதவு திறக்க முடியாத உயரத்திற்கு ஐஸ் பாறைகள். அநேகமாக பெரும்பாலான வீடுகள் ஒருபக்கம் ‘ஐஸி’னால் மூடப்பட்டிருக்கும். பின்புறம் வழியாகத்தான் அவர்கள் தினமும் பனிக்கட்டிகளை உடைத்துவிட்டு கதவைத் திறந்து மூடுவர். உடன் மூடிவிட வேண்டும். இல்லாவிடில் உட்புறம் பனி உறைந்துவிடும். பின் கார் செல்வதற்கு வழியைக் கொத்தி சரி செய்வார்கள். இதுவே பாதி ஆண்டின் வழக்கம்.

இப்படி இருக்கும்பொழுது எப்படி ‘மால்’களில் கூட்டம் வருகிறது? இத்தகைய காலகட்டத்தில் திறந்தவெளி உடற்பயிற்சிகளோ, விளையாட்டுக்களோ எதுவோ யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எப்படியும், அலுவலகப் பணிகளுக்குப் பலரும் செல்ல வேண்டிய கட்டாயம்தான். அத்தோடு சேர்த்து தங்கள் பொழுதுபோக்குகளையும், பொருட்கள் வாங்குவதையும், குடும்பத்துடன் இதமான வெப்பத்தில் உல்லாசத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், மக்கள் ‘மால்களை’ நாடிச் செல்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஊர் முழுவதும் உறைந்து  காணப்பட்டாலும், ‘மால்’களில் அதன் எதிரொலியாக கண்காட்சிகளும், மலர்க்கண்காட்சிகளும் மக்கள் கூட்டத்தையே அலைமோதச் செய்யும். நடைபாதைகளைக்கூட அவர்கள் அந்த நேரத்தில் பசுமை நிறைந்த புல்வெளிகளாக மாற்றிவிடுவர். அதற்கேற்ற சீதோஷ்ண நிலையை செயற்கை முறையில் ஏற்படுத்தி விடுவர். பூக்களை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா, என்ன? வாழ்வின் தொடக்கம் முதல் நம் இறுதி ஊர்வலம் வரை பூக்கள்தானே நமக்கு மரியாதையைத் தருகின்றன.

எப்பொழுதும் இங்கு கோடைகளில், பசுமையையும், வண்ண மலர்களையும் காண முடியும். மரங்கள்கூட உறைந்துவிட்ட நிலையில், கண்ணைப் பறிக்கும் கலர்ப்பூக்களை அங்கு பார்க்கலாம். மிகச்சிறிய இடங்களில் வண்ண மயமான நிறங்களில் கொடி மற்றும் செடி ரோஜாக்களைக் கண்டுகளிக்கலாம்.

வண்ண வண்ண இலைகளைக் கொண்ட செடிகள், அதிலும் ஒவ்வொன்றிலும் மூன்று நான்கு வண்ணங்கள் கொண்ட ஒரே செடி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த சமயத்தில் மாணவச் செல்வங்கள் கைகளில் குறிப்பேடுகளுடன் வலம் வருவதைக் காண முடிகிறது. பூக்கள் என்றால் பொதுவாக பெண்களும், இயற்கை விரும்பிகளும் வந்து ரசிப்பார்கள்.

ஆனால் இங்கு எந்த வித்தியாசமுமின்றி, முதிய தம்பதிகள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைத்திலும் பங்கெடுக்கிறார்கள். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். தெரியாத விஷயங்களைக் கேட்டு குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் விஞ்ஞானம், தாவரவியல் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இவை அனைத்தும் நல்ல ஒரு வழிகாட்டி எனலாம். ‘ப்ளூமிங்டன்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘மால் ஆப் அமெரிக்கா’ என்பது மிகவும் பிரசித்தி பெற்றது என்றே சொல்லலாம்.

சிரமப்பட்டு ஏதேனும் தூசி, குப்பை தரையிலிருந்து எடுக்க வேண்டும் என்று தேடினால் கூட கிடைக்காது. முகத்தை எப்பொழுது வேண்டுமானாலும் தரையிலேயே பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவு கூட்டத்திலும் அப்படி ஒரு தூய்மை. அப்படி ஒரு அழகான மலர்க்காட்சியை எப்படித்தான் வடிவமைத்தார்களோ, தெரியவில்லை.

ஒவ்வொரு கடையின் வாசலிலும், தள்ளுபடி பலகை காணப்பட்டது. ரெடிமேடு ஆடைகள் முதல் அழகு சாதனங்கள் வரை அனைத்தும் அளவில்லா எண்ணிக்கையில் காணப்பட்டன.

பெண்களுக்கு விதவிதமான அழகுப்பூக்கள் அனைத்தும் கிடைத்தன. ஒரு சில அயிட்டங்களை பரிசோதித்தபின்தான் வாங்க முடியும் என்று நினைத்தால், அதை கடைக்காரர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் சிறிய ‘டப்பாவில்’ நமக்கு ‘மாதிரி’ தந்துவிடுகிறார்கள்.

இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்திப் பார்த்த பிறகுகூட, வாங்கிக் கொள்ளலாம். செடிகளையும், பூக்களையும் பார்த்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு மூலையிலும் பழச்சாறு, காபி மற்றும் தின்பண்டக் கடைகள், கேட்டு முடிப்பதற்குள் ஆர்டர் எடுத்து சுடச்சுட செய்து தந்துவிடுகிறார்கள்.

நல்ல குடிநீர் ஒவ்வொரு மூலையிலும், பூக்களுடன் பலர் குடும்பப் போட்டோ எடுப்பதற்காகவே வருவார்கள். இங்குள்ள சூழல் அமைந்திருப்பதே அதற்குக் காரணம் எனலாம். அங்கங்கே நிறைய வண்டிக் கடைகள் வேறு. வளையல்கள், மணிமாலைகள் போன்றவை சீனா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருந்தன.

பூக்களின் அழகையும், ஒவ்வொரு கடையின் பூக்களால் ஆன அலங்காரங்களையும் சொல்லி முடியாது. தரை முழுவதும் ஏதோ ரோஜா மூட்டைக்குள் நின்றுகொண்டிருப்பதுபோல இருந்தது. மிகச்சிறிய இடங்களைக்கூட பூக்களைக் கொண்டு எப்படி அலங்கரிக்கலாம் என்று செய்து காட்டப்பட்டிருந்தது.

அங்கங்கே கொடிகள் போன்ற தோரணங்களும் நம்மை வரவேற்றன. ‘‘நமக்கு யார் மலர்க்கிரீடம் சூட்டப்போகிறார்கள்?’’ என்று நாம் விளையாட்டாக பேசுவதுண்டு. ஆனால் அங்கு நிஜமாகவே வருபவர்கள் அனைவரும் மலர்க்கிரீடத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதற்கு வரிசைக் காத்திருந்தது. ஒரு கடையின் முகப்பில் விதவிதமான கிரீடம் போன்ற அமைப்புகள் மேலிருந்து கட்டித்தொங்க விடப்பட்டது. ஆண்களுக்கு ஒருவிதமான அமைப்பு, பெண்களுக்கு வேறு விதமான அமைப்பு, சிறுவர்கள் வைத்துக்கொள்ளும் விதத்தில் ஒருவித அமைப்பு என பார்க்க கண்ணைப் பறித்தது.

அவரவர் திருமணத்தில்கூட அப்படி ஒரு பூ அலங்காரம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். உட்புறம் தலையில் மாட்டும்படி தொப்பி போன்ற அமைப்பு, அது வெளியில் தெரியாத அளவுக்கு அதன் மேல்பாகம் முழுவதும் பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அவர்களுக்குரிய இடத்தில் சென்று அப்படியே தலையில் மாட்டிக்கொள்ள வேண்டும். என்ன ஒரு புதுமையான, அதிசய செயல்! அவ்வளவு பூக்களை எப்படித்தான் தலையில் சுமந்தோம் என்றே தெரியவில்லை.

இனி யாரேனும் எனக்கு அப்படி ஒரு கிரீடம் வைப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதுபோல் புதுமையான விஷயங்கள் நிறைய இருந்தன. குழந்தைகள் விளையாடவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஏற்ற அம்சங்கள் நம்மை அசர வைத்தன. அத்தகைய சூழலில் புகைப்படம் எடுத்துக்கொண்டால், ஏதோ ஒரு சொர்க்க லோகத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் தோன்றும்.

வெளி உலகமே தெரியாத அளவுக்கு உள்கட்டமைப்பு இருப்பதால், அனைவரும் இங்கு வருவதை பெரிதும் விரும்புகிறார்கள். நுழைவுக்கட்டணம் கிடையாது. பனிக்கட்டிகளுக்கு நடுவே அவஸ்தைப்படுவதை தவிர்த்து, இதமான வெப்பத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

பயிற்சிக்கூடங்களுக்குச் செல்ல வேண்டுமா அதுவும் உண்டு. உடல்வலி ‘மசாஜ்’ செய்துகொள்ள வேண்டுமா, அங்கங்கே ஓய்வெடுக்கும் சாய்வு நாற்காலிகள் உள்ளன. அதில் அமர்ந்து கேட்கும் பணத்தை போட்டுவிட்டால், ஓய்வு எடுத்துக்கொண்டு, உடல்வலி போக புதுத்தெம்புடன் திரும்பலாம்.

கண்களுக்கு குளிர்ச்சி தரும் வண்ணப்பூக்களும், செடி, கொடிகளும் நம்மை உற்சாக வெள்ளத்தில் திக்கு முக்காடச் செய்கின்றன. வீட்டுப்பொருட்கள் எதுவானாலும் தள்ளுபடி விலையில் கிடைப்பதுடன், அனைத்து இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் கிடைக்கும். அங்கங்கே வயிற்றுப்பசிக்கு விருப்பமான தின்பண்டங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கும்.

‘மாலின்’ கட்டட அமைப்பே நம்மை வியப்பில் ஆழ்த்தும். கலையம்சம் கொண்ட சில ஞாபகார்த்தங்களும் உண்டு. உதாரணத்திற்கு, ஒரு கடையில், நம்மை உட்காரச்செய்து அந்த நிமிடம் நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே தத்ரூபமாக வரைந்து தந்து விடுவார்கள். அரைமணி நேரம்தான் எடுக்கும். களைப்பு நீங்க ஐஸ்கிரீம்.

அதுவும் அங்கு ‘பக்கெட்’ அளவில் ஐஸ்கிரீம் தருவார்கள். காபிதான் பெரிய குடுவை ‘சைஸ்’ என்றால் ‘ஐஸ்கிரீம்’ பக்கெட் ‘சைஸ்’. இவையெல்லாம் அனுபவிக்கக் கிடைத்தால், நமக்கு ‘மால்’ போக பிடிக்காதா, என்ன? நாள் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்துவிட்டு, ‘மாலை’ விட்டு வெளியே வந்தால் மீண்டும் பனி உலகம்!

சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Related Stories: