×

சடகோவும் ஆயிரம் கொக்குகளும்!

நன்றி குங்குமம் தோழி

1945 ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உலக வரலாற்றில் மறக்க முடியாத தினம். இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

குண்டு வீச்சில் தப்பி பிழைத்தவர்கள் அனைவரும் வாந்தி, தலை சுற்றல், ரத்தப் போக்கு, முடி இழப்பு, தீக்காயங்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாகினர். பல கோர சம்பவங்களுக்கு பிறகு உலகப் போர் முடிவுக்கு வந்தாலும், இன்றும் அந்த நாள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது. அதற்கு சடகோ சசாகியும் காரணம்.

சடகோ ஜப்பானைச் சேர்ந்த சிறுமி. புற்றுநோயின் பாதிப்பால் 12 வயதில் இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்றாள். அவளின் இறப்பு போர் எவ்வளவு கொடியது என்பதையும் அதனால் அப்பாவி மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்றும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

சடகோ போர் நடைபெறும் போது தான் பிறந்தாள். பிறக்கும் போதே எடைக்குறைவாக பிறந்ததாலும், தன் குடும்பத்தினரின் பேரன்பால் நன்றாகவே வளர்ந்தாள். 1945, ஆகஸ்ட் 6ஆம் நாள், அமெரிக்க அரசு ஹிரோஷிமாவில் முதல்முறையாக அணுகுண்டை வீசியபோது, அதில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது சடகோவிற்கு இரண்டு வயசு. குண்டின் தாக்குதலால் வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்ட சடகோவை அவளின் தாய் அள்ளிக்கொண்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள இடம் தேடி ஓடினார்.

வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு இருபது நிமிடங்கள் கழித்து, Black Rain எனப்படும் கருப்பு மழை, அனைத்து அணுகுண்டு கழிவுகளையும், கதிர்வீச்சுடனும், விஷ வாயுடன் பொழிந்தது. அந்த மழையில் சடகோ மட்டுமில்லாமல், பல அப்பாவி மக்கள் நனைந்தனர். அது அவர்களைக் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாக்கியது.

கதிர்வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்  ஒவ்வொருவருக்கும், ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அதில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். எப்படியோ  சடகோவின் குடும்பத்தினர் தப்பித்தாலும், அவர்கள் குடும்பத்திலும் கதிர்வீச்சு பாதிப்பால் ஒவ்வொருவராக உயிரிழந்து வந்தனர். அந்த தாக்குதல் நடந்து பல வருடங்கள் ஆயினும், மக்கள் அச்சத்திலும், சோகத்திலும்தான் நாட்களை கடந்து வருகின்றனர்.

ஆனால் சடகோ அதையெல்லாம் மறந்து தன் கவனத்தை ஓட்டப்பந்தயத்தில் செலுத்தினாள். ஓட்டப்பந்தயத்தில் அவளை மிஞ்ச அந்த ஊரில் எவருமே இல்லை. வீட்டிற்கும் பள்ளிக்கும் எனத் தினமும் ஓடி பயிற்சி எடுத்தாள். சடகோ உயர்நிலைப் பள்ளியில் ரிலே டீமில் கலந்துகொள்ள, விடா முயற்சியுடன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் மயங்கி விழுந்தாள். உடனே சடகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது கூட, தன் பயிற்சி தடைப்பட்டு போகுமே என்று வருந்திய சடகோவிற்கு, இனி அவள் பள்ளிக்கு செல்லவே முடியாது என்பது தெரிந்திருக்கவில்லை.

சடகோவிற்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் சடகோவிற்கு மருத்துவமனையே வீடானது. 12 வயதான சடகோ தனியாக தன் குடும்பத்தை பிரிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். குணமாகவேண்டும் என்பதை தாண்டி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே அவளது நோக்கமாகயிருந்தது.

 ‘நீ சீக்கிரம் குணமானால்தான் வீட்டிற்கு செல்ல முடியும்’ என்று மருத்துவர்கள் கூற, சடகோ கசப்பான மருந்தையும், வலி மிகுந்த சிகிச்சையையும் எதிர்க்காமல் தினம் மருத்துவர்கள் சொல்வதைக்கேட்டு நடந்தாள். ஒரு நாள், சடகோவின் நெருங்கிய தோழி சிசுகோ அவளை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தாள். அவள் கையில் சில பேப்பரும் கொண்டு வந்திருந்தாள்.

தோழிகள் இருவரும் பள்ளி கதைகள் பேசி முடித்தும், சிசுகோ, தான் கொண்டுவந்திருந்த பேப்பரை எடுத்து அதில் ஒரு கொக்கு செய்தாள். ஆரிகாமி முறையில் செய்த அந்த கொக்கை, சடகோவிடம் கொடுத்து, “உனக்கு இந்த கொக்கு கதை நினைவிருக்கிறதா? உடல்நலம் சரியில்லாத ஒருவர், இப்படி ஆயிரம் பேப்பர் கொக்குகள் செய்து முடித்தால், அவர் நிச்சயம் குணமாகிவிடுவார்” என்றாள்.

இந்த ஜப்பானிய கதை சடகோவிற்கும் தெரிந்திருந்தது. தோழி சொல்லியபடி ஆயிரம் கொக்குகள் செய்ய வேண்டும் என்று தீர்மானித்த சடகோ அதற்காக மருத்துவமனையில் இருக்கும் ரசீதுகளிலும், செவிலியர்களிடமிருந்து பேப்பர்களை கடன் வாங்கியும் கொக்குகள் செய்ய துவங்கினாள். ேநாயின் தாக்கம் அவளின் உடலின் வலிமையை குறைத்துக் கொண்டே வந்தது. ஆனாலும் மனம் தளராமல் கொக்குகள் செய்வதை மட்டும் அவள் நிறுத்தவே இல்லை. அவள் செய்த கொக்குகளை சடகோவின் அண்ணன் மசாஹிரோவும், தங்கை மிட்சுவும் மருத்துவமனை அறையில் எங்கும் தொங்கவிட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல, சடகோவின் நோய் தீவிரமானது. அக்டோபர் 25, 1955 அன்று, குடும்பமும் நண்பர்களும் சூழ்ந்திருக்க, சடகோ இறந்து போனாள். அவள் இறப்பதற்குள் ஆயிரம் பேப்பர் கொக்குகள் செய்து முடித்ததாக ஒரு தரப்பினரும், சடகோ உடல் நிலை மோசமாகி வெறும் 644 பேப்பர் கொக்குகள் செய்ததாகவும், மீதியை அவள் பள்ளி நண்பர்கள் செய்து அவள் கல்லறையில் வைத்ததாகவும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறிவருகின்றனர். ஆனால் சடகோவின் நினைவாக, ஜப்பானில் உலகஅமைதியின் சின்னமாக கொக்குகள் விளங்குகின்றன.

ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில், சடகோ தங்கக் கொக்கை ஏந்தியபடி நிற்கும் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், சியாட்டில் உள்ள அமைதிப் பூங்காவிலும், சடகோவின் சிலை உள்ளது. 2013ல், புகழ்பெற்ற கலைஞர் Sue DiCicco, ‘Peace Crane Project’யை துவங்கி வைத்தார். இதன் மூலம் உலகத்தில் இருக்கும் பள்ளி குழந்தைகள் அனைவரும் அவரவர் பள்ளியிலிருந்து ஆயிரம் கொக்குகள் செய்து வேறொரு நாட்டில் இருக்கும் பள்ளிக்கு அனுப்புவார்கள். இந்த திட்டத்தில் மதுரையைச் சேர்ந்த பள்ளி ஒன்றும் கலந்து கொண்டிருக்கிறது.

 பல பள்ளிகளிலிருந்தும், குழந்தைகள் ஆரிகாமி முறையில் கொக்குகள் செய்து, அதில் குறுஞ்செய்திகளும் எழுதி வேறு நாட்டு மாணவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் உலக அமைதியின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துச்சென்றிருக்கிறார் Sue DiCicco. ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமாவின் அணுகுண்டு நினைவு தினத்தில், ஜப்பான் மாணவர்களுக்கு சடகோவின் கதையை வருடம்தோறும் ஆசிரியர்கள் கூறுவது வழக்கமாகியிருக்கிறது.

இன்றும் ஜப்பானில் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் Orizuru Towerக்கு சென்றால், அங்கு ஒரு மேஜையில் பேப்பர்களும், அதில் எப்படி கொக்கு செய்ய வேண்டும் என்ற குறிப்புகளும் இருக்கும். பார்வையாளர்கள் அதில் கொக்கு செய்து, ஐம்பது மீட்டர் உயரமான அந்த கட்டடத்தின் உச்சிக்குச் சென்று, அவர்கள் செய்த கொக்கை அங்கிருந்து பறக்க விடுகின்றனர்.

ஸ்வேதா கண்ணன்

Tags : Sadako ,
× RELATED பாஜ, அதிமுக கூட்டணி முற்றிலும் ...