×

கிச்சன் டைரீஸ்

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


டயட் மேனியாவில் தொடர்ந்து பலவிதமான டயட்களைப் பார்த்து வருகிறோம். இந்த டயட்களில் எல்லாமும் எல்லோருக்கும் செட் ஆவதில்லை. இதனால், உங்களுக்கான டயட் எது என்று நன்கு பரிசீலித்து, மருத்துவ ஆலோசனையின்படி நடந்துகொள்வதே சிறந்தது. பல வாசகர்கள் என் நண்பர்கள் பின்பற்றுகிறார்கள், என் உறவினருக்கு நல்ல பலனைத் தருகிறது. நானும் அந்த டயட்டை மேற்கொள்ளலாமா என்று கேட்கிறார்கள். இது மிக மிகத் தவறான அணுகுமுறை என்றே உணவியல் நிபுணர்கள் எப்போதும் சொல்கிறார்கள். நம் உடல் தனித்துவமானது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொருவிதமான கட்டுமானம் உண்டு. நம் பால், வயது, குடும்பச் சூழல், மரபியல், வளரும் சூழல் எனப் பல காரணங்களால் இந்தத் தனித்தன்மை வடிவமைக்கப்படுகிறது. எனவே, உங்களுக்கு ஏற்ற டயட் எதுவென்று கண்டுபிடித்து அதைப் பின்பற்றுவதே மிகவும் நல்லது. ஒவ்வாத டயட்களைப் பின்பற்றினால் நினைத்ததுக்கு மாறாக எடை அதிகரிப்பு ஏற்படுவதோடு, அரிதாகச் சிலருக்கு உடல்நலக் கோளாறுகளும் உருவாகின்றன. எனவே, கவனமாக இருக்க வேண்டியுள்ளது. நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை நன்கு புரிந்த பிறகு அதற்கு ஏற்ப சரியான டயட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து அடுத்த இதழில் மேலும் சில டயட் வகைகளைப் பார்ப்போம்.

ஆரஞ்சில் அதிகமான வைட்டமின் சி உள்ளது என்று ஒரு மித் உள்ளது. இது உண்மைதான் ஆரஞ்சில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளதுதான். ஆனால், இதைவிடவும் நமது ஊர் நெல்லிக்காயில் அதிகமான வைட்டமின் சி நிறைந்துள்ளது. நூறு கிராம் ஆரஞ்சில் நாற்பத்திரண்டு கிராம் வைட்டமின் சி இருந்தால் நெல்லிக்காயில் அதைவிட அதிகமாகவே உள்ளது. நம் ஊர் பழங்ங்களிலேயே அத்தனை சத்துக்கள் உள்ளன எனும்போது ஆப்பிள், ஆரஞ்சு என்று அந்நியப் பழங்களை நாம் தேடிப்போக வேண்டியதில்லை.

உணவு வரலாறு

உலகின் பழமையான எண்ணெய் வித்துகளில் எள் பிரதானமானது. நாம் விவசாயம் கண்டுபிடித்தவுடன் முதன் முதலில் கண்டறிந்த எண்ணெய் வித்தாகவும் இதுவே இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழில் எண்ணெய் என்ற சொல்லின் மூலம் தேடிச் சென்றால் அது, எள்+நெய் என்ற சொற்களின் இணைவாக இருப்பதைக் காணலாம். நெய் என்ற சொல்லால் குழைவான கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருளைக் குறித்தனர் நம் முன்னோர். பசும் பாலில் இருந்து எடுக்கப்படுவது பசு நெய், மிருகக் கொழுப்பில் இருப்பது ஊண் நெய், அது போல் எள்ளில் இருந்து எடுக்கப்படுவது எள் நெய், அதுவே எண்ணெய் என்று ஆனது.

இப்படி, எல்லா வகை எண்ணெய்களுக்கும் பொதுச் சொல்லை வழங்கிய மூத்த எண்ணெய் எள் எண்ணெய்தான். அதனால்தான் இதனை நல்லெண்ணெய் என்று சொல்கிறார்கள்.  தமிழ் சமூகத்தோடு எள்ளும் நல்லெண்ணெயும் கொண்டிருக்கும் தொடர்பு ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானது. எள்ளை சமையல் முதல் நீத்தார் சடங்குகள் வரை பலவகைகளில் பயன்படுத்தும் பழக்கம் நமக்கு உண்டு. அதுபோலவே நல்லெண்ணையும் சமைக்க மட்டும் அல்ல, உடல் சூடு குறைக்க உடலில் தேய்த்துக் குளிக்கவும், நோயுற்ற காலங்களில் மருந்து தயாரிக்கவும் பயன்பட்டிருக்கிறது. எள்ளின் விதை, காய், பூ என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை.

நமது சங்க இலக்கியங்களிலேயே எள் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. எள்ளை நம் முன்னோர் அமங்கலப் பொருட்களில் ஒன்று என்று கருதினர். மேலும், அமங்கலங்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் நம்பினர். அதனால்தான் நீத்தார் சடங்குகளில் எள்ளுக்குப் பிரதான இடம் கொடுக்கப்பட்டது. கணவனை இழந்த விதவைப் பெண் எள் துவையல் உண்ண வேண்டும் என்ற கருத்து புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வருகிறது. பூதப்பாண்டியன் எனும் பாண்டிய அரசன் இறந்த போது அவன் மனைவி கோப்பெருந்தேவி சொல்வதாக இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. மேலும், எதிரிகளை அவமானப்படுத்த அவர்கள் நிலத்தில் கழுதை ஏர் பூட்டி உழுது, எள் விதைத்த கதை எல்லாம் இங்கு உண்டு. இவை எள்ளின் மீதான அமங்கலப் பார்வைக்குச் சான்றுகள்.

உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால் நம்மைப் போலவே ஆப்பிரிக்கர்களும் எள் சாகுபடியை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே மேற்கொண்டுள்ளனர். ஆனால், இவ்விரண்டு ரகங்களும் வெவ்வேறு என்கிறார்கள். நாம் நமக்கான தனித்துவமான எள்ளையே சாகுபடி செய்துள்ளோம். இந்தியாவில் 5500 ஆண்டுகளுக்கு முன்பே எள் சாகுபடி செய்திருப்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. அதேபோல் ஆப்பிரிக்காவில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே இவை சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோல் பாபிலோன், அசிரியா பகுதிகளிலும் 4000 ஆண்டுகளுக்கு முன் இவை சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன.

தற்போது உலக அளவில் எழுபது லட்சம் டன் எள் ஆண்டுதோறும் உற்பத்தியாகிறது. தான்சானியா, மியான்மர், இந்தியா, சூடான் ஆகியவை எள் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன.எள்ளில் கறுப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று வித அடிப்படை ரகங்கள் உள்ளன. இன்றைய தேதியில் கறுப்பு எள்தான் தமிழகத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. அடுத்த நிலையில் சிவப்பு எள்ளும் அதற்கடுத்த நிலையில் வெள்ளை எள்ளும் விளைகின்றன. தற்போது எட்டு வகையான நவீன எள் ரகங்கள் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன.

எக்ஸ்பர்ட் விசிட்

உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்ப்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கச் செய்யலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி முரளி.

தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதச்சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சினை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும். மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு ப்ரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம். சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடலாம்.

காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லைஎன்றாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்  வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ரூட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம். ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்(1 கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.

பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5 கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

ஃபுட் சயின்ஸ்


நார்ச்சத்து என்பது தாவரங்களில் உள்ள முக்கியமான சத்துப்பகுதி. இதை நமது செரிமான மண்டலத்தில் உள்ள என்சைம்களால் முழுமையாக உடைத்துச் செரிக்க முடியாது என்பதால் இவை உடலைவிட்டு முழுமையாக வெளியேறுகின்றன. இதனால், நார்ச்சத்து என்பது மனித உடலுக்கு இயற்கையான மலமிலக்கியாகச் செயல்படுகிறது.

நமது செரிமான மண்டலம் மிகச் சிறப்பாகச் செயல்பட நார்ச்சத்து மிகவும் அவசியம். நார்ச்சத்து உடலில் சேரும்போது பிற உணவுக் கழிவுகளையும் வெளியேற்றிக் கொண்டுவந்துவிடுகிறது. மேலும் இதனை என்சைம்களால் உடைக்க முடியாது என்பதால் இதற்கு கலோரி எனும் ஆற்றல் விகிதமும் இல்லை. இதனால் உடலில் ஆற்றல் அல்லது சர்க்கரை சேராது.

அதேசமயம் வயிற்றில் நிறைவதால் பசியுணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால், நார்ச்சத்து இயற்கையான டயட் கண்ட்ரோல் ஏஜென்டாக உள்ளது. நார்ச்சத்து உள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளும்போது மலச்சிக்கல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குணமாகின்றன.

நார்ச்சத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து என இருவகை உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து என்பது குடலில் உள்ள வாயுக்களால் உடனடியாக நொதித்துவிடக்கூடியது. இவை, குறுவளைய கொழுப்பு அமிலங்கள் எனும் உடலியக்க துணை பொருட்களால் இந்த நொதித்தலை அடைகின்றன. நம் குடலில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களே இந்த கொழுப்பு அமிலங்களை வெளியிடு கின்றன. இது மிகுந்த இழை தன்மை கொண்டது. ப்ரீபயாடிக் ஃபைபர் என்பார்கள்.

இந்த நார்ச்சத்துகள் வாயுக்கள் உடலில் குறைவதைக் கட்டுப்படுத்துவதாலேயே நமக்கு வயிறு நிறைந்த உணர்வு உருவாகிறது. நீரில் கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் உள்ள என்சைமகளால் கரைக்கவோ உடைக்கவோ இயலாமல் சேகரிக்கப்படுகிறது. சிலவகை ஸ்டார்ச்சுகள் பெருங்குடலில் நொதிக்கின்றன.

உணவு விதி #37

உணவோடு மல்லுக்கட்டாதீர்கள். இதுவும் ஓர் அழகான விதி. பலருக்கு இது புரிவதில்லை. உணவு மனித உடலின் ஆதாரம் என்பதால் எப்போதுமே அது நமது மனதைவிட வலிமையானது. ஒரு குறிப்பிட்ட உணவை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இயன்றவரை அதைப் பார்க்காமல் இருப்பது, கையில் தொடாமல் இருப்பது நல்லது.

நானெல்லாம் மிகுந்த மனக் கட்டுப்பாடு கொண்ட ஆளாக்கும். அதைப் பார்த்துட்டே என்னால் சாப்பிடாமல் இருக்க முடியும் என்பதைப் போன்ற மல்யுத்தம் வேண்டாம். இதனால், அந்தத் தருணத்தில் கட்டுப்பாட்டோடு நீங்கள் வென்றாலும் நம் மனம் நம்மை ஏமாற்றி கட்டுப்பாடற்ற ஒரு தருணத்தில் தன் வேட்கையைத் தணித்துக்கொள்ளும். எனவே, அஞ்ச வேண்டிய உணவுக்கு அஞ்சாததும் பேதமைதான்.

இளங்கோ கிருஷ்ணன்

Tags :
× RELATED கிச்சன் டைரீஸ்