தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையற்ற தன்மையால், அவசரப்பட்டு நகை வாங்கினால், எங்கே மறுநாள் விலை குறைந்து விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவி வந்தது.  இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,408க்கும், சவரன் ரூ.35,264க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,413க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,304க்கும் விற்கப்பட்டது.

நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,438க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,504க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.248 அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் நவராத்திரி பண்டிகை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையில் இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னர் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: