‘பழைய துணிக்கு பிளாஸ்டிக் கொடம், பக்கெட்டு’

நன்றி குங்குமம் தோழி

இந்தக் குரலை கேட்காதவர்கள் இருக்கவே முடியாது. எத்தனை பெரிய பாத்திரக் கடைகள் இருந்தாலும் இவர்களுக்கு இன்றும் மவுசுதான்.. காரணம், பழைய துணிதான் இதில் பிரதானம். நாம் பயன்படுத்திவிட்டு வேண்டாம் என ஒதுக்கும் துணிகளை, நம் வீட்டு வாசல்வரை வந்து வாங்கிக்கொண்டு, பதிலுக்கு வீட்டுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், சில்வர் மற்றும் அலுமினியப் பாத்திரங்களை கொடுத்துச் செல்லும் இந்தத் தலைச்சுமை தெரு வியாபாரிகளை அறியாதவர்களே இருக்க முடியாது.

பெரும்பாலும் ஆண்களே வியாபாரிகளாய் இதில் சைக்கிளில் வலம் வருவார்கள். ஆனால் இந்தத் தொழிலில் பெண்களும்இருக்கிறார்கள். அதுவும் முழுக்க முழுக்க தலைச்சுமை வியாபாரிகளாக. பெரும்பாலும் 50 வயதைக் கடந்த பெண்களே இதில் அதிகம். அவர்களைச் சந்தித்தபோது…

‘‘எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறையைக் கடந்து நாங்கள் இந்தத் தொழிலைச் செய்கிறோம்’’ எனப் பேசத் தொடங்கிய தமிழ்ச்செல்விக்கு வயது 40. நான் படிக்கலை. என் அம்மா இந்த பிளாஸ்டிக் வியாபாரத்துக்கு போகும்போது, நானும்கூடவே போவேன்.

அப்படியே பழகிட்டேன்...’’ ரொம்பவே எதார்த்தமாய் பேசுகிறார் இவர். ‘‘என் கணவரும் இதே வியாபாரம் செய்பவர்தான். ஆனால் அவர் வேற இடங்

களுக்கு சைக்கிளில் போவாறு. நான் வேறு பகுதிகளுக்கு என்னோட ட்ரை சைக்கிளைத் தள்ளிக்கிட்டே போவேன்.

எங்கூடப் பிறந்த  அண்ணன், அக்கா எல்லாரும் இந்தத் தொழில்தான் செய்யுறாங்க. அதுமாதிரி என் அத்தை, பெரியம்மா,சித்தி, அண்ணன், தம்பி, மனைவின்னு எல்லாருமே இந்தவியாபாரம்தான். எங்களுக்கு வேற தொழில்செய்யத் தெரியாது’’ என்கிறார்.

‘‘சூளைமேட்டில் இருந்து காலையிலஎட்டு மணிக்கு என்னோட மூணு சக்கர வண்டிய பெடல் போட்டு தள்ள ஆரம்பிச்சா அப்படியே னிவாசபுரம், பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், மைலாப்பூர், மந்தவெளின்னு டிராபிக்ல சுற்றி வீடு வந்து சேர ராத்திரி எட்டு மணியாகும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் யாரும் பழைய துணி போடமாட்டாங்க.

அன்னைக்கு மட்டும் நாங்க தொழிலுக்கு போக மாட்டோம். ஆனால் அன்னைக்குதான் நாங்க வாங்கிச் சேர்த்த எல்லா பழைய துணி மூட்டைகளையும் தரம் பார்த்து பிரிக்கும் வேலைய செய்வோம். வாங்கிய துணிகள் எங்க கொடவுனுல அப்படியே மூட்டை மூட்டையா கிடக்கும். துணிய பிரிச்சு முதலாளிங்ககிட்ட கொடுத்தாதான் பணம் கிடைக்கும்.

வாங்கிய துணிகளில் கிழிஞ்சது, சின்ன கிழிசல், பெரிய கிழிசல், நஞ்சது, கலர் போனது, நல்லா இருக்கும் துணி எனப் பிரித்து, அதிலும் சேலை, பேன்ட், சட்டை, டீ ஷர்ட்டுன்னு வகைப்படுத்துவோம். மத்தவுகளுக்கு ஞாயித்துக்கெழமை ரெஸ்டு இருக்கும். எங்களுக்கு அன்னைக்கும் ஓய்வில்லை. மத்தவுக ஓய்வா இருக்குற அன்னைக்குதான் எங்களுக்கு துணியே கிடைக்கும். அன்னைக்கும் தெருத் தெருவா அலைவோம்.

சிலநேரம் செலவுக்கு கையில காசு இல்லைனா செவ்வாக் கிழமையும் கிளம்பிடுவோம். அலைச்சல்தான் என்ன பண்றது’’ என்றவர், ‘‘கொடவுனில் தரம் பிரித்த துணிகளை மறுபடியும் மூட்டை கட்டி, பழைய துணிகளை மொத்தமாக வாங்கும் இடத்தில் கொண்டுபோய் சேர்க்கனும். அதன் பிறகே எங்களுக்கு பணம் கிடைக்கும். பணம் வேண்டாம் என்றால் அவர்களிடம் இருக்கும் தேவையான பிளாஸ்டிக், அலுமினிய, சில்வர் பாத்திரங்களை மொத்தமாக வாங்கிக்கலாம்.

நானும் என் வீட்டுக்காரரும் உழச்சுதான் என் மூணு பொண்ணுகளப் படிக்க வைக்கிறோம். என்னோடவே இந்த தொழில் ஒழியட்டும், என் பொண்ணுகள நான் இதில் நுழைய விடமாட்டேன்’’ என்றவர், ‘‘என்னை மாதிரி தெருத் தெருவா அலஞ்சு என் பிள்ளை

களும் கஷ்டப்படக் கூடாது. அதுக்காகத்தான் ரெண்டுபேரும் ரொம்பக்கஷ்டப்படுறோம். என் பொண்ணுங்க பெரிய படிப்பெல்லாம் நல்லா படிக்கனும்’’ எனும் தமிழ்ச்செல்வியின் மூத்த மகள் பிஸியோ தெரபி படிக்கிறார். இரண்டாவது பெண் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில்

பி.சி.ஏ.மாணவி. மூன்றாவது மகள் அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

‘‘வீட்டு வாடகை எட்டாயிரம் ஆகுது. பொருட்களை வைக்கிற கொடவுனுக்கு நாலாயிரம் வாடகை கொடுக்கனும். கரென்ட் யூனிட்டுக்கு 7ல் இருந்து 8 வாங்குறாங்க. அதுவே எங்களுக்கு மாதம் 1200 வருது. இதில் என் மூணு பிள்ளைகளையும் கடன் பட்டுதான் படிக்க வைக்கிறோம். நாங்க சம்பாதிக்கிறது படிப்புசெலவுக்கு வாங்குன கடன அடைக்கவுமே சரியா இருக்கு. ரெண்டு மாதத்திற்கு ஒரு முறை 1 லட்சத்துக்கு கடன் வாங்கித்தான் இந்தப் பொருட்களை வாங்கி விற்கிறோம்.

பொருள் வித்தா எங்க கடனுக்கே சரியா இருக்கும்’’ என்கிறார். ‘‘வியாபாரம் நல்லா இருந்தா ஒரு நாளைக்கு 500ம் கிடைக்கும்… வியாபாரம் இல்லைனா நூறு ரூபாய் கூடக் கிடைக்காது. பேன்டுக்கு 5, சட்டைக்கு 5, புடவைக்கு 10, வாயில் புடவைனா 15 ரூபாய்னு விலை வைப்போம். ஒவ்வொரு துணிக்கும் 2 முதல் 3 ரூபாய் லாபம் கிடைக்கும். துணி போடுறவுங்க பணத்தை வாங்கிக்குவாக. பணம் வேண்டாம்னா எங்களிடம் இருக்கும் பிளாஸ்டிக், அலுமினியம், சில்வர் பாத்திரங்களை வாங்குவாங்க. துணியைவிட பாத்திரத்தின் விலை கூடுதலா இருந்தால் மீதி தொகையைக் கொடுத்ததும் பொருளை கொடுத்திருவோம்’’ என முடித்தார்.

‘‘எனக்குத் தெரிஞ்சு 35 வருடத்துக்குமேல இந்தத் தொழில் செய்யுறோம். எந்த முன்னேற்றமும் இல்லை’’ எனும் மகேஸ்வரியின் வயது 63. ‘‘எங்களுக்குள் ஏரியாக்களை பிரித்துக்கொள்வோம். சிலர் இங்கிருந்து வில்லிவாக்கம், காந்தி நகர், ஐ.சி.எப்., அயனாவரம், சிலர் சூளைமேடு, என்.எஸ்.கே. நகர், வடபழனி, கோயம்பேடு,அமிஞ்சிகரை, அண்ணா நகர், டி.பி. சத்திரம், சத்தியா நகர்னு தலைச்சுமையாய் நடந்து போய் வித்துட்டு வருவோம். மழையா இருந்தாலும் கஷ்டம், அதிகம் வெயிலாக இருந்தாலும் எங்களுக்கு கஷ்டம்.இதில் எங்களுக்கு கஷ்டங்கள்தான் நிறைய இருக்கு’’ என்கிறார்.

காலையில 8 மணிக்கு சாமானத் தூக்கி தலையில வச்சா ரோடு நெடுக பழைய துணிக்கு பிளாஸ்டிக் கொடம், பக்கெட்...பிளாஸ்டிக் கொடம், பக்கெட்டுன்னு கொரல் கொடுத்துகிட்டே போவோம். பிளாட்டு வீடுகளில் மேலே இருப்பவர்களும் பெரும்பாலும் கூப்பிடுவார்கள். எத்தனை மாடின்னாலும் தலைச் சுமையோட மாடியில ஏறனும். நாம சொல்ற ரேட்டு அவுகளுக்கு செட்டாகலைன்னா கொஞ்சமும் யோசிக்காம, பொருளைக் கொடுத்தால் கொடு இல்லைனா போயிக்கிட்டே இரு... வேற ஆளுக்கு போடுறேன்னு  சொல்லி திருப்பி அனுப்பீடுவாக. கட்டுப்

படியானால் கொடுக்கத்தானே போறோம்.

தலைச்சுமை மூட்டைகளோடு மாடியில ஏறுனது இறங்குனது சாமான பிரிச்சது, துணிய பிரிச்சதுன்னு எங்களுக்கு கூடுதல் கஷ்டம்தான். போகும்போது சுமைகளோடு நடந்தே போவோம். திரும்பி வரும்போது துணி மூட்டைகளும் சேர்ந்துவிடும், அப்போது ஆட்டோவில்தான் பெரும்பாலும் வீடு திரும்புவோம்.  இத்தனை கஷ்டப்பட்டாலும் எங்களால் வீட்டு வாடகையைக்கூட சரியா கொடுக்க முடியல. சிலர் வீட்டில் கணவர் சம்பாதிக்கிற மாதிரி இல்லைனா வயதானாலும் இந்த தொழிலை செய்தே ஆகவேண்டியுள்ளது’’ என்றார்.

70 வயதான முத்துலெட்சுமி பாட்டி பேசும்போது, ’’2000 முதல் 4000 ரூபாய் சாமான்களை தலைச் சுமையாகவே கொண்டு போறோம். எங்கள் கூடையில் பிளாஸ்டிக் டப்புகள், பக்கெட்டு, கப்பு, அலுமினிய பாத்திரங்கள், சில்வர் சாமான்கள் இருக்கும். தோள்களின் இரண்டு பக்கமும் 10 முதல் 15 குடங்கள், இடுப்பு, தலை, தோள் என எல்லா இடத்திலும் சாமான்களை சொருகிக்கொண்டு,இரண்டு கை இடுக்கிலும் துணி மூட்டைகளோடு நடக்கத் தொடங்கினால், எல்லாமே எங்களுக்கு வித்துறாது. வீடு திரும்பும்போது விற்காத பொருட்களும் திரும்பவும் எங்களுக்கு சுமைதான்’’ என்கிறார் விரக்தியின் விளிம்பில். இதில் மயக்கம், களைப்பு, வண்டியில் அடிபட்டு கீழே விழுகுறதுன்னு எல்லாமும் உண்டு.தாம்பரம் வரை கூட நடந்தே போயிருக்கோம்’’  என்ற முருகேஸ்வரியின் வயது 38.

‘‘சில நேரம் எங்களுக்கு வாழ்க்கை மீது வெறுப்பா இருக்கும். ஆனால் எங்க பிள்ளைங்க படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. படிக்க வைக்கிற செலவு இங்க எங்களுக்கு ரொம்பவே அதிகமா இருக்கு. எங்களால் சமாளிக்க முடியலை. பெரும்பாலும் ரேசன் அரிசிதான் வீடுகளில். தண்ணி லாரிகளையும், அடித்து எடுக்கும் குழாய் தண்ணிகளையும் நம்பியே இருக்கிறோம். கட்டிடங்கள் நவீனமாகி, பிளாட் வீடுகள் அதிகமாக வந்ததில் செக்யூரிட்டிகள் எங்களை கேட்டில் நிறுத்தி வியாபாரத்துக்கு உள்ளே விடுவதில்லை.

பெரும்பாலும் இதில் எங்களுக்கு மூட்டுவலி, கழுத்து வலி, தோள்வலி, வண்டி தள்ளி விற்பனை செய்கிறவர்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகளும் வருது. அரசு ஆஸ்பத்திரிதான் எங்களுக்கு’’ என்றவரை மாற்றுத் தொழில் செய்யலாமே எனக் கேட்டபோது, ‘‘தலைமுறை தலைமுறையா இதைப் பழகிட்டோம். எங்களுக்கு வேற தொழில் பத்தி தெரியல. யாராவது எங்களுக்கு இலவசமா ஓட்டுநர் பயிற்சி தந்து, கால் டாக்சி, ஆட்டோ ஓட்டும் தொழிலை கத்துக் கொடுத்தால் செய்யத் தயார்’’ என்கின்றனர் நாற்பது வயதைத் தொட்ட தமிழ்ச் செல்வியும், முருகேஸ்வரியும்.

கூட்டத்தில் அதிக வயதில் இருந்தவர்களில் ஒருவரான 75 வயது முத்தம்மா பாட்டி பேசும்போது, பக்கத்துல இருக்குற இடங்களுக்கு தலைச் சுமையாக விற்பனை செய்யச் செல்வதாய் சொன்னார். ‘‘போன வருசம் எனக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்துச்சு தாயி, ஆனாலும் வேற வழியில்லை.

இந்தத் தொழிலில்தான் இருக்கிறேன். நாங்க வியாபாரத்துக்குன்னு நடந்தே போற குடிசைப்பகுதிகள், சேரிகள் எல்லாம் இப்ப ஊருக்கு ஒதுக்குப்புறமா செம்மஞ்சேரி போயிருச்சு. எங்க வியாபாரமும் ரொம்பவே படுத்துருச்சு’’ என்கிறார்.

‘‘பெரும்பாலும் நாங்கள் குழுவாக சேர்ந்து இருப்பதால் வயது முதிர்ந்த எங்களுக்குஅரசு உதவி செய்து கடை வைக்க இடம் தந்து உதவினால் நாங்கள் தெருத்தெருவா அலையாமல் ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்வோம். விரும்புறவுக துணியக் கொண்டுவந்து போட்டுவிட்டு பாத்திரத்தை எடுத்துச் செல்லட்டும்’’ என்கின்றனர் இவர்கள் கோரசாக.

‘‘தலைச்சுமையாய் நடந்து பல கிலோ மீட்டர் கடக்கும் நாங்கள் யாராக இருந்தாலும் மாலையில் வீடு வந்து சேர்ந்தால்தான் நிச்சயம்’’ எனக் கூறி விடை கொடுத்தனர் இந்த தலைச்சுமை வியாபாரப் பெண்கள்.

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்

Related Stories: