கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...

நன்றி குங்குமம் தோழி

வாழ்வென்பது பெருங்கனவு!

ஒரு மாளிகை வாங்க வேண்டும், மாளிகையைச் சுற்றி நீர்நிலைகள், அதில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பயணம்... இப்படி பல்வேறு வகையான கனவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவ்வப்போது வந்து நீண்டுகொண்டே செல்லும்.

ஆனால், நடைமுறையில் ஒருசிலருக்கே கனவுகள் நனவாகின்றன. வேலைக்குச் செல்லும் சராசரி பெண்ணாக இல்லாமல் பலருக்கு வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும், ஒரு தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற தனது கனவில் வெற்றி பெற்று இன்றைக்கு ஆண் - பெண் இருபாலருக்குமான சில் ப்ரீஸ் சலூன் (Chill Breeze Saloon) என்ற பெயரில் அழகு நிலையம், மந்த்ரா ஹவுஸ் போட் என்ற பெயரில் படகு இல்லம் உள்ளிட்ட பல தொழில்களை நிறுவி தான் கண்ட வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தொழில்முனைவோர் அனு.

‘‘ஒரு சராசரி பெண்ணாக வேலைக்குச் செல்லாமல், நாலுபேருக்கு வேலை கொடுக்க வேண்டும், ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்பதே என் சிறுவயது கனவாக - லட்சியமாக இருந்தது. காரணம் எனது அப்பா இண்டஸ்ட்ரியல் தொழில் செய்து வந்தார். வேலைக்கு சென்று அதன் மூலம் குடும்பத்தை நடத்துபவர்களைவிட ஒரு தொழில் செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துபவர்களுக்கும் இடையிலான வாழ்க்கைத்தரம் அந்த வயதிலேயே எனக்கு புரிய ஆரம்பித்தது. சென்னை ஓட்டேரியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில்தான் பிறந்தேன்.

அப்பா சிறியதாக இண்டஸ்ட்ரியல் நிறுவனங்களின் மூலம் தொழில் செய்து கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பெல்லாம் அரசுப் பள்ளிதான். அடுத்து சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.காம் படித்து  முடித்ததும் திருமணம். என் எண்ணத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு அன்பான மற்றும் அனுசரணையான கணவராக கிடைத்தவர் ரமேஷ். அவர் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். நான் வெளியே வேலைக்கு செல்வதில் அவருக்கும் சரி என் குடும்பத்தினருக்கும் விருப்பமில்லை.

எனவே, அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்தபோது அழகுக்கலை பயிற்சி பற்றிய அறிமுகம் கிடைத்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பியூட்டீஷியன் கோர்ஸ் என்பதெல்லாம் அதிகம் கிடையாது. எதிர்காலத்தில் இத்தொழிலுக்கு நல்லதொரு வாய்ப்பு உள்ளது என என் மனதில் தோன்றியதால் சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் அழகுக் கலை குறித்த

பயிற்சியில் சேர்ந்து படித்தேன்.

கற்றக் கலையை பயன்படுத்தாமல் போனால் அதனால் பயன் இல்லை. அதனால், அதனை பயன்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தபடியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என் அழகுக் கலை திறமையை பயன்படுத்தி வந்தேன். ஒரு முறை வந்தவர்களுக்கு, என்னுடைய சேவை பிடித்துப்போகவே அடுத்தவர்களிடம் சொல்லி அவர்களும் வரத்தொடங்கினார்கள்.

ஆட்கள் நிறைய வர ஆரம்பித்ததால், வீட்டில் அதனை தொடர்ந்து செய்ய முடியவில்லை. குறிப்பாக திருமண அலங்காரம் வீட்டில் வைத்து செய்வது என்பது சரியாக பொருந்தவில்லை. அதனால் வீட்டின் கார் ஷெட்டிலேயே பத்துக்கு பத்து ஒரு அறை அமைத்து அழகு நிலையமாக மாற்றினேன். தொழில் வளர்ச்சி கண்டது. அந்த நேரத்தில்தான் பிரபல கார்ப்பரேட் அழகு நிலையங்கள் நகரங்களில் வரத்தொடங்கின. அதனால் நானும் எனது கடையை மவுண்ட்ரோட்டில் உள்ள ஸ்பென்சர் பிளாஸாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்.

இரண்டாவது கடையை அடையாறு பகுதியில் தொடங்கினேன். தரமான சேவையை கொடுத்து நன்கு பிரபலமானதால் ஃபிரான்சைஸி கேட்டு வரத்தொடங்கினர். சென்னை, மதுரை என ஃப்ரான்சைஸி கொடுக்கத் தொடங்கினேன். இன்றைக்கு எங்களது அழகு நிலையம் பன்னிரண்டு ஃப்ரான்சைஸி அழகு நிலையங்களும் மற்றும் எங்களுக்கு சொந்தமாக இரண்டு என மொத்தம் பதிநான்கு அழகு நிலையங்கள் உள்ளன. அழகுக்கலை சார்ந்து மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் அழகுக்கலை குறித்த படிப்புகளை படித்தேன். அழகுக்கலையில் பி.எச்டி பட்டப்படிப்பிற்காக இவ்வாண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்’’ எனும் அனு அழகுக் கலை எவ்வளவு  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை  விளக்கினார்.

‘‘அழகாக, எடுப்பாக, வசீகரமாக இருத்தல் என்பது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. திருமணத்துக்கும் வேறு வைபவங்களுக்கும் செல்வதற்கு முன் மேக்-அப் போட்டுக்கொள்வதே அழகுக் கலை அல்லது அழகு சிகிச்சை என்று பலர் நினைக்கின்றனர். அதற்காகத்தான் இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். எனினும் எடுப்பாக இருத்தல் என்பது தொடர்ந்து நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

எடுப்பாகவும், வசீகரமாகவும் தோற்றம் அளிப்பதன் மூலம் மற்றவர்கள் மனதில் கவுரவமான இடத்தை நாம் பிடிக்க முடியும். எடுத்துக்கொண்ட காரியத்தை சாதிக்க முடியும். இது துணிச்சலையும், தன்னம்பிக்கையையும், சாதிக்கும் மனப்பான்மையையும் ஒருவருக்கு ஏற்படுத்தும். ஆளுமையைத் தோற்றுவிக்கும், இதற்கு மேலாக, நமது உடலின் மீது ஒரு அக்கறையை ஏற்படுத்தி நமது உடலை சீராக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

ஒரு சிறந்த மனிதனாக உங்களை நீங்கள் சமுதாயத்தில் அடையாளப்படுத்த உங்கள் புறத்தோற்றம் மிகவும் முக்கியம். புறத்தோற்றம் என்பது, உங்கள் சருமத்தின் ஆரோக்கியம், அணியும் உடைகள், நீங்கள் பழகும்விதம்... என்பனவற்றை உள்ளடக்கி இருப்பதே. சிறப்பான ஆளுமை உள்ளவர்களாக உங்களை அடையாளப்படுத்துவதில் உங்கள் முகம் முதலிடத்தில் உள்ளதால் முகத்தை, மிகவும் கவனமான முறையில் பராமரிக்க அழகுக்கலை என்பது இன்றியமையாதது’’ என்று சொன்ன அனு பல்வேறு பயிற்சி வகைகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.  

‘‘ஒப்பனை, மெகந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், பிளீச்சிங், பெடிக்யூர், மெனிக்யூர், ஆயில் மசாஜ், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், திரெட்டிங், மணப்பெண் அலங்காரம் என ஏராளமான அழகு பராமரிப்பு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவை அடிப்படை. இதிலேயே அட்வான்ஸ்டு, ஹைடெக் என்று போகும்போது சிறிது செலவு கூடும். அதற்கேற்ப வருமானமும் உண்டு’’ என்ற அனு அழகுக்கலை பயிற்சியை பல்வேறு பெண்களுக்கும் கற்றுத்தருகிறார்.

‘‘பல்வேறு பரிணாமங்களில் வளர்ந்து நிற்கும் இக்கலையை விரும்புபவர்களுக்கு சொல்லித்தருவதே எனது விருப்பம் மற்றும் பெருங்கனவு. ஏற்கனவே, அரசு நிகழ்ச்சியில் 300 பெண்களுக்கு அழகுக் கலை குறித்து இலவசப் பயிற்சி அளித்துள்ளேன். எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைப் பார்த்து வருகிறார்கள். வேலைக்கு சேரும் பெண்களுக்கு எங்களது கலைக்கூடத்திலேயே பயிற்சி அளிக்கிறோம்.

அழகுக் கலைப் பயிற்சி பெற வேண்டுமானால் குறைந்தது முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் வசதி வாய்ப்பு இல்லாத பெண் இந்த கலையை கற்றுக் கொள்ள விரும்பினால், மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறேன். உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்று முயற்சி எடுத்து வருகிறேன்.  

இவை மட்டுமல்லாமல் புதுச்சேரியில் மந்த்ரா ஹவுஸ் போர்ட் என்ற பெயரில் படகு இல்லம் வைத்துள்ளேன்.

இதுபோன்று ஏராளமான தொழில்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு தொழில்முனைவோராக நான் கண்ட கனவில் வெற்றி பெற்றிருக்கிறேன். என் போன்று தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்ட அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே என் நோக்கம்’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் அனு ரமேஷ்.

தோ.திருத்துவராஜ்

Related Stories:

>