பசியில்லா தேசம்

நன்றி குங்குமம் தோழி

அக்டோபர்-16 சர்வதேச உணவு தினம்(world food day). நம் அருகாமையில் இருப்பவர்களை ‘சாப்டாச்சா’ எனக் கேட்கும் அந்த ஒற்றை வார்த்தை எத்தனை மகத்துவம் நிறைந்தது எனப் பேசத் தொடங்கிய வைஷ்ணவி பாலாஜி, ‘கோயம்புத்தூர் ஃபுட்பேங்க்’ என்கிற தன்னார்வ அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் கோவையை ‘நோ பெக்கர் ஃப்ரீ சிட்டியாக’ மாற்றுவதே என் கனவு என்கிறார் இவர்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது கோவை. இங்குள்ள சிஐடி கல்லூரியில் பொறியியல் முடித்தபோது எனக்கு திருமணம் முடிவானது. வளாகத் தேர்வில் தேர்வாகியும் வாய்ப்பை பயன்படுத்த முடியாத நிலை. தொடர்ந்து குழந்தைகள், குடும்பம்  என்று வாழ்க்கையில் கொஞ்சம் இடைவெளி விழ, என் விருப்பம் மற்றும் வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் அடிக்கடி வந்துபோகும்.  அப்போது தோன்றியதுதான் ‘ஃபுட் பேங்க்’ கான்செப்ட். நல்ல விசயத்தைச் செய்ய ரொம்பவும் யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்து செயலில் இறங்கிவிட்டேன்.

சாலையை கடக்கும்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிச்சை எடுப்பதையும்,  சாலையோரங்களில் உணவுக்காக கையேந்தி நிற்பதையும் பார்க்க, அந்தக் காட்சிகள் என் மனதை ரொம்பவே பாதித்தது. ஒரு நாள் நடந்து சென்றபோது, கையில் தொடப்பத்தோடு ஒரு முதிய பெண்மணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். என் அருகில் வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் ஓடி அவரைத் தூக்கியபோது,  கண்கள் உள்ளிழுத்து, வயிறு ஒட்டி பசி மயக்கத்தில் அவர் விழுந்தது புரிந்தது. என் கைளில் இருந்த தண்ணீரைக் கொடுத்து உட்கார வைத்தேன்.

அருகே இருந்த வீட்டின் கதவைத் தட்டி சாப்பிட எதாவது இருக்கா எனக் கேட்டேன். அவர்கள் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுத்தார்கள். பாட்டியை  சாப்பிட வைத்து நான் கிளம்ப முயற்சித்தபோது, அவர் என் கைகளைப் பற்றி, ‘நீ ஒரு வாய் தண்ணீரும் இந்த ரொட்டியும் கொடுக்கலைன்னா இந்நேரம் நான் போய் சேர்ந்திருப்பேன்’ எனச் சொன்னார். அந்த சில நிமிட நிகழ்வு எனக்குள் மாற்றத்தை உருவாக்கியது.  சாப்பாடு இல்லைன்னா வாழ்க்கையில் ஒன்னுமே இல்லை என சிந்திக்க வைத்தது.

உணவுக்காக யாரும் கஷ்டப்படக் கூடாது என நினைத்தேன்.  என்ன செய்யலாம் என யோசித்தபோது, சென்னையில் இயங்கும் ஒரு அமைப்பு ஆதரவற்றோர், முதியோர், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தினமும் உணவுப் பொட்டலங்களை வழங்குவதாகக் கேள்விப்பட்டேன்.

2015 அக்டோபர் 16 சர்வதேச உணவு தினத்தில், ‘ஃபுட் பேங்க் கோயம்புத்தூர்’ என்கிற இந்த அமைப்பைத் துவங்கி, 20 உணவுப் பொட்டலங்களோடு ஆரம்பித்தேன்.  இன்று இது மிகப் பெரும் அமைப்பாக உருவாகி இருக்கிறது. 200 தன்னார்வலர்களோடு இரண்டரை லட்சம் உணவுப் பொட்டலங்கள் கோவையில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவினைச் சிறப்பிக்கும் பொருட்டும், உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு இவற்றை வலியுறுத்தியும் கோயம்புத்தூரில் இருக்கும் கல்வி நிலையங்கள், உணவகங்கள், பேக்கரி தயாரிப்பு நிலையங்கள், விடுதிகள், பெரு நிறுவனங்களை அணுகி, உணவை வீணடிக்கக் கூடாது, வீணாகும் உணவுக்கான தேவை வெளியில் எவ்வளவு இருக்கிறது போன்ற விழிப்புணர்வினை நேரிலும் சுவரொட்டிகள், பதாகைகள் மூலமாகவும் கோவையின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறோம்.

உணவை வீணடிக்காமல் இருக்க அமைப்பின் வழியே தொடர்ந்து விழிப்புணர்வை வழங்கி வருகிறோம். கல்லூரிகளில் எவ்வளவு உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது என்பதை எடை மெஷின் வைத்து அளந்து அவர்களிடத்தில் காண்பித்து அதன் வழியாகவும் விழிப்புணர்வை வழங்குகிறோம். உணவு கொடுக்கும்போதே அவர்களின் பிரச்சனைகளையும் பேசி எங்களால் முடிந்த மாற்று வழிகளையும்  செய்கிறோம். சில நேரங்களில் சின்ன சின்ன வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்கிறோம்.

வாட்ஸ்ஆப் வழியே  தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கிறோம். எதற்காகவும் நாங்கள் கைகளில் பணம் பெறுவதில்லை. உணவாக மட்டுமே பெற்றுக் கொள்கிறோம். தயாராய் இருக்கும் உணவுகளை அந்தந்த பகுதியில் இருக்கும் தன்னார்வலர்கள் மூலமாகப் பெற்று, தேவையானவர்களுக்கு வாரத்தின் மூன்று நாட்கள் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்குகிறோம்.

துவக்கத்தில் இதை ஆரம்பிக்கும்போது மக்களிடத்தில் பெரிய விழிப்புணர்வு இல்லை. ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்கள் வழியே எங்கள் செயல்பாட்டை தொடர்ச்சியாய் தெரியப்படுத்திக் கொண்டே வந்தோம்.  எங்களின் செயல்பாட்டை அறிந்த பலர் தாங்களாகவே தன்னார்வலராய் அமைப்பில் இணைந்தார்கள். பெரும்பாலும், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் இதில் அதிகம்.

சிலர் குடும்பமாகவும் ஈடுபடுகிறார்கள். சிலர் வரும்போதே வீடுகளில் உணவை சமைத்தும் எடுத்து வருகிறார்கள். சிலர் உணவுப் பொட்டலங்களை வழங்கும் செயலில் இறங்கி விடுகிறார்கள். ஒரு நாளைக்கு 350 முதல் 400 உணவுப் பொட்டலங்கள் என்கிற கணக்கில், ஒரு வாரத்திற்கு 1000 உணவுப் பொட்டலங்களை வழங்குகிறோம்.  ஒரே இடத்தில் 1000 பேருக்கு உணவு சமைப்பது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, அதனை பொது மக்களுக்கு தெரிய வைப்பது என, விழிப்புணர்வு சார்ந்த விசயங்களையும் மிகப் பெரிய அளவில் நடத்துகிறோம்.

உணவுப் பொருட்களை விளைவிப்ப திலும், தயாரிப்பதிலும் எத்தனை பெரிய உழைப்பு மறைந்திருக்கிறது என்கிற செய்தியையும், வீணடிக்கும் உணவில் எத்தனை மில்லியன் மக்கள் பசியாறுகிறார்கள் என்கிற விசயத்தையும் பொதுமக்கள், மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறோம். அதன் வழியே அவர்களை நிறைய யோசிக்க வைக்கிறோம்’’ என்கிறார்.

‘மை ஸ்டுபிட் லிட்டில் சயின்ஸ்’,  ‘மாபா ஸ்டுபிட் சொல்யூஷன்’, ‘யூத்ஃபுல் இந்தியா’ என்கிற பெயர்களில் சில முன்னெடுப்புகளை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் சார்ந்து செய்து வரும் வைஷ்ணவி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோட்டிவேஷனல் ஸ்பீச்களையும் வழங்கி வருகிறார். ‘ஸ்டே ஷேஃப்’ என்கிற திட்டம் வழியே மாணவர்களிடம் எப்படி பாதுகாப்பாய் இருப்பது என்பது குறித்த விழிப்புணர்வுகளை வழங்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார். இதில் மிக முக்கியமானது ஆன்லைன் அடிக் ஷன் என்கிறார் இவர்.

‘‘அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும் என் அன்றைய நாள், கராத்தே வகுப்பு, சமையல், குழந்தைகள், பொது வேலைகள், மீண்டும் மாலையில் குழந்தைகள் என டைட்டாகவே இருக்கிறது எனச் சிரிக்கிறார். என் செயல்பாடுகள் சிலவற்றில் என் குழந்தைகளான கிருஷிட்டா, ஜீவிதேஷ் இருவரையும் சேர்த்தே இணைத்துக் கொள்கிறேன்’’ என விடை பெற்றார்.

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: