ஒரு அப்பாவி பெண்ணின் கதை!

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய சினிமா

வாழ்க்கையின் போக்கிற்கும், சூழலின் நிர்பந்தத்திற்கும், அதிகாரத்தின் மிருகத் தன்மைக்கும் பலியான ஒரு அப்பாவி பெண்ணின் கதை தான் ‘டான்சர் இன் த டார்க்’.

அழகான மனதிற்குச் சொந்தக்காரியான செல்மா செக் நாட்டைச் சேர்ந்தவள். கண் சம்பந்தமான நோயினால் கடுமையாக அவதிப்படுகிறாள். எதையும் அவளால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. கொஞ்ச நாட்களில் முற்றிலும் பார்வையை இழக்கப்போகிறோம், தனக்கிருப்பது பரம்பரை பரம்பரையாக இருக்கும் நோய் என்று தெரியவர மேலும் அதிர்ச்சியடைகிறாள். தனது குறைபாட்டை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காத்து வருகிறாள்.

தினசரி வாழ்க்கை தருகிற சலிப்பும், நோயும், இயலாமையும் செல்மாவை அணு அணுவாக வதைக்கிறது. அதிலிருந்து விடுபட பகல் கனவில் மூழ்குகிறாள். நாடகத்தில் நடிக்கிறாள். இருந்தாலும் அவளால் எதிலும் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. நிஜங்களுக்கு மதிப்பில்லாத நிழல் உலகத்தில் தனக்கான ஒளியை இசையில் கண்டடைகிறாள். பாடல் அவளின் நிலையை மறக்கடிக்கிறது. பகல் கனவில் நடனமாடிக்கொண்டே பாடுகிறாள். அது அவளின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பாய்ச்சுகிறது. தன்னுடைய எல்லா உணர்வுகளையும் பாடலின் வழியாகவே வெளிப்படுத்துகிறாள்.

எல்லா இடங்களிலும் பாடிக்கொண்டே இருக்கிறாள். அவளின் வாய் எப்போதும் ஏதோவொரு பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில் தனக்கிருக்கும் நோய் மகனுக்கும் இருக்கிறது என்பது தெரியவர உடைந்து போகிறாள். சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தால் மகனின் பார்வையை சரிசெய்துவிடலாம் என்பதை அறிகிறாள்.

மகனின் பார்வையை காப்பாற்ற வேண்டும் என்பதே அவளின் லட்சியமாக மாறுகிறது. அதற்காக அமெரிக்காவிற்கு வருகிறாள். சிறு வயதிலிருந்தே ஹாலிவுட் படங்களின் தீவிர ரசிகை அவள். அமெரிக்கா தன்னை கைவிட்டுவிடாது. தன் மகனின் பார்வையை காப்பாற்றும் என்று நம்புகிறாள்.

வாஷிங்டன் மாகாணத்தில் பில் என்ற காவல்துறை அதிகாரியின் இடத்தில் டிரெய்லர் ஹோமில் வாடகைக்குத் தங்குகிறாள். பில்லும் செல்மாவும் விரைவிலேயே நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். அவளுக்குப் பொருளாதார ரீதியாக உதவிசெய்ய யாருமே இல்லை. கணவருடன் அவளுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால் வாழ்வாதாரத்துக்காகவும், மகனின் அறுவை சிகிச்சைக்காகவும் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் வேலைக்குப் போகிறாள்.

அங்கே கேத்தி என்ற அற்புதமான தோழி கிடைக்கிறாள். அவள் செல்மாவின் கண்களாக இருக்கிறாள். அவளை நாடகத்திற்கும், சினிமாவிற்கும் அழைத்துச் செல்கிறாள். எப்போதும் எந்தச் சூழலிலும் அவளுடனேயே இருக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் ஜெப் என்பவர் செல்மாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். செல்மாவிற்கு வேண்டிய எல்லாவற்றையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கிறார். காதலை ஏற்றுக்கொள்கிற சூழலில் செல்மா இல்லை என்று தெரிந்தபின்னும் ஜெப் அவளை எந்தவிதத்திலும் நிர்ப்பந்திப்பது இல்லை. அழகான நட்பு, ஆழமான காதல் தன்னைச் சூழ்ந்திருக்க செல்மாவின் வாழ்க்கை மென்மையாக நகர்கிறது.

தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பச் செலவுகள் போக கொஞ்ச பணத்தை மகனின் அறுவை சிகிச்சைக்காக ஒரு டப்பாவில் சேமிக்கிறாள். ஒரு நாள் பில் செல்மாவிடம், ‘‘தன் மனைவி பணத்தை விரயமாக்குவதால் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேன். முன்பு வாங்கிய கடனையே சரியாக அடைக்க முடியவில்லை. கொஞ்ச நாட்களில் வீட்டை பேங்க்காரர்கள் ஜப்தி செய்யப்போகிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது...’’ என்று புலம்புகிறார். ‘‘இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்...’’ என்றும் சொல்கிறார்.

செல்மாவும் தனக்குப் பார்வை பறிபோகிற ரகசியத்தையும், தன் மகனின் அறுவை சிகிச்சைக்காக பணம் சேகரித்துவரும் ரகசியத்தையும் பில்லிடம் கொட்டிவிடுகிறாள். உடனே செல்மா சேர்த்து வரும் பணத்தை கடனாக கேட்கிறார் பில். அவள் தர மறுக்கிறாள். விடாப்பிடியாக கெஞ்சுகிறார். செல்மாவும் தன் பிடியில் இருந்து மாறாமல் நிற்கிறாள். தன்னை மன்னிக்குமாறு பில்லிடம் வேண்டுகிறாள். வேறு ஏதாவது ஏற்பாடு செய்துகொள்கிறேன் என்று பில் சொல்லவே செல்மா சமாதானம் அடைகிறாள். ஆனால், செல்மா எங்கே பணத்தை வைக்கிறாள் என்பதை ஒளிந்திருந்துஅறிந்துகொள்கிறார் பில்.

நாளுக்கு நாள் பார்வைத்திறன் குறைவாகி வருவதால் செல்மாவால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை. அதனால் வேலையைவிட்டு நீக்கப்படுகிறாள். மனமுடைந்து வீட்டுக்கு வருகிற அவள் தான் சேகரித்து வந்த பணம் திருடுப்போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். பில் தான் அந்தப் பணத்தை எடுத்திருப்பார் என்று அவரின் வீட்டுக்குச் சென்று மென்மையாக வாதத்தில் ஈடுபடுகிறாள். பில் பணத்தை கொடுக்க மறுக்கிறார்.

இருவருக்கும் இடையில் தகராறு முற்றுகிறது. அப்போது பில் தன்னுடைய நிலை, தான் செய்த செயல் மனைவிக்கும், வெளியேயும் தெரிந்தால் மிகுந்த அவமானம் ஆகிவிடும் என்கிறார். ‘‘என்னை கொலை செய்துவிடு. அதுதான் சரி...’’ என்று செல்மாவிடம் கெஞ்சுகிறார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியமும் வாங்கிக்கொள்கிறார். செல்மா பில்லை கொலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்

படுகிறாள்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட செல்மா நாள், தேதி, நிமிடம் எல்லாம் குறிக்கப்பட்டு சட்டப்படி தூக்கில் ஏற்றப்படுகிறாள் அல்லது அதிகாரத்தால் கொலை செய்யப்படுகிறாள்.  அவள் மரணிக்கும்போது இயலாமையால் பாடுகின்ற முற்றுப்பெறாத பாடல் பல கேள்விகளை எழுப்பி நம் மனதை அறுப்பதோடு படம் நிறைவடைகிறது. செல்மாவாக சிறப்பாக நடித்த பிஜோர்க்கும், இப்படத்தை இயக்கிய டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் லார்ஸ் வோன் டிரேயருக்கும் ‘கான்’ திரைப்பட விழாவில் உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

பாடலும், நடனமும், இசையும் அது படமாக்கப்பட்ட விதமும் மிகவும் புதுமையானவை. செல்மா கடைசிவரைக்கும் உண்மையை யாரிடமும் சொல்வதில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ஒருவேளை அவள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். இப்படி உண்மை வெளியே வராமல் தங்களின் வாழ்க்கையை இழந்த பலரை நினைவுப்படுத்துகிறாள் செல்மா.

அமெரிக்காவின் அதிகார பீடத்திடம் தன் நிலையை, தன் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்த செல்மாவிற்கு எந்த சுதந்திரமும் வழங்கப்படுவதில்லை. அப்படியே அவள் வெளிப்படுத்தியிருந்தாலும், அது உண்மையாக இருந்தாலும் அதை நம்புகின்ற ஆட்கள் அங்கே இல்லை. அவள் சார்பாக யாரையாவது பேசவைக்க அவளிடம் பணமும் இல்லை.

அவள் நம்பி வந்த அமெரிக்கா அவளை கைவிட்டுவிடுவதோடு மட்டுமல்லாமல் உயிரையும் பறித்துவிடுகிறது. ஆனால், அவள் தன் நிலைக்கு காரணமான யாரையும் குற்றம் சொல்லவில்லை. அதுவே அவள். செல்மாவைப் போன்ற ஒரு ஜீவன் தான் நான் என்று உங்களால் சொல்லாமல் இருக்க

முடியாது.

த.சக்திவேல்

Related Stories:

>