இப்படி இருக்கறவங்களை எல்லோருக்குமே பிடிக்குமாம்!

நன்றி குங்கும் டாக்டர்

குடும்ப விழாக்கள், அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில், ஒரு சிலர், பார்த்த மாத்திரத்தில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிடுவார்கள். அவருடைய தோற்றம், பேச்சுத்திறமை அல்லது நகைச்சுவை உணர்வு இப்படி ஏதோ ஒன்று சுற்றியுள்ளவர்களை ஈர்த்துவிடும். அப்போது அவரைப் பார்த்து இவரால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்று நமக்கு வியப்பு வரும். அவரை நம் நண்பராக்கிக் கொள்ளவும் முற்படுவோம். இதுபோன்ற மனிதர்களை தம்முடன் சேர்த்துக் கொள்வதில், எப்போதுமே மனிதனின் தேடல் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

ஒரு சிலர் மட்டும் பலரையும் கவர்வதற்கான காரணம் என்ன?

உளவியலாளர்கள் இதற்கு சொல்லும் காரணம் தன்னுடைய விருப்பங்கள், மனப்பான்மைகள், நோக்கங்கள் அல்லது உள்ளுணர்வுகளை அவர் பிரதிபலிப்பதனாலும் இருக்கலாம் என்கிறார்கள். ஒருவரின் தனித்துவத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் கூட, சிலரது நடவடிக்கைகள் மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருக்கும். அதே விழாவில் எதிர்மறை எண்ணங்கள், அவநம்பிக்கைகளோடு மற்றவர்களைப்பற்றி குறை கூறிக்கொண்டும், புறம்பேசிக்கொண்டும் இருப்பவர்களை நாம் விரும்புவதில்லை. அவர்களைப் பார்த்தாலே பாம்பைப் பார்த்தது போல் ஒதுங்கிவிடுவோம். கவர்ச்சியானவரை பார்த்து வியக்கும் நமக்கு, அடுத்தவரை கவரும் யுக்தி நமக்கில்லையே என்ற ஏக்கமும் கூடவே இருக்கும். அது ஒரு கலை. நமக்குள்ளே இருக்கும் அந்த உணர்வை வெளிக்கொண்டு வர சில பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


சரி, மற்றவர்களைக் கவரும் திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

நகைச்சுவை உணர்வு

வாழ்க்கை பல நேரங்களில் கடினமாக இருக்கலாம். பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதற்காக முகத்தை இறுக்கமாக வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே. கடினமான நேரத்தை எதிர்கொள்ள மகிழ்ச்சியும் அவசியம். இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் தன்னையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு, தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இதனாலேயே, அவர்களைச் சுற்றி எந்நேரமும் நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

உற்சாகம்

எதிலும் எப்போதும் ஆர்வம் மிக்கவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஒன்றன்மீதான ஆர்வம் அதைக் கற்றுக் கொள்வதில் உற்சாகத்தை கொடுக்கும். கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லையேல் வாழ்வில் பிடிப்பே இருக்காது. அந்த ஆர்வம் தான் நம்மை முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். குடும்பம், நண்பர்கள், வேலை, கலை, படிப்பு இப்படி எதில் வேண்டுமானாலும் நம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். ஏதோ வேலை செய்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்று எதிலும் பற்றில்லாத போக்கு சீக்கிரமே வாழ்க்கைய போரடிக்கச் செய்துவிடும்.

முடிவெடுக்கும் திறன்

முடிவெடுப்பதை தள்ளிப்போடுவதும் தவறு; அவசரகதியில் எடுப்பதும் தவறு. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது வெற்றியாளர்களின் சீக்ரெட். இவர்களை நாம் எல்லோருமே விரும்புவோம். இவர்களின் இந்த பண்பு எளிதில் மற்றவர்களை வசீகரிக்கும். வழவழவென்று இழுத்தடிப்பவர்களையும், முடிவெடுக்க தயங்குபவர்களையும் யாரும் விரும்ப மாட்டார்கள்.

அன்பு

தன்னையும், பிறரையும் நேசிப்பவர்கள் நிச்சயம் அன்பானவர்களாக இருப்பார்கள். பிறரிடத்தில் நடந்து கொள்ளும் விதம், கனிவாகவும், பணிவாகவும் இருக்கும். மற்றவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமில்லாமல், எப்போதுமே அன்பாக இருந்து பாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்குமே பிடித்தவராய் இருப்பீர்கள். அந்தக் கனிவு நண்பர்களிடத்தில் மட்டுமல்லாது, தெரியாதவர்களிடத்திலும் இருப்பது இன்னும் சிறப்பு. இந்த கனிவு உங்களை ஒரு நல்ல மனிதனாக
மாற்றும்.

வெளிப்படைத்தன்மை

மூடி மறைத்து பேசுவது அறியாமையின் வெளிப்பாடு. வெளிப்படையாக இருப்பவரோடு, எந்தவொரு விஷயத்தைப் பற்றியும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச முடியும். யாரையும் அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிடமாட்டார். சூழ்நிலைகளை கூர்ந்து கவனித்து, முடிவெடுப்பவர்களாக இருப்பதால், அவருடைய கருத்துக்களை அனைவரும் எளிதில் ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்.

அனைவரிடத்திலும் நம்பிக்கை
நடைமுறையில் இது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்காக எல்லோரையுமே சந்தேகத்தோடு பார்ப்பது நம் நெருங்கிய வட்டத்தை சுருக்கிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு பரஸ்பரம் நம்பிக்கையை வெளிப்படுத்துவது, சிலநேரங்களில் அடுத்தவரையும் நம்பிக்கைக்குரியவராக மாற்றும். இப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருப்பது, பாதுகாப்பான நபர்களாக வசதியாக உணரமுடியும். நம்பிக்கை உணர்வு, கவர்ச்சிகரமானது மட்டுமல்ல, அது மற்றவருக்கும் பரவக்கூடியது.

ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்

இன்றைக்கு சமுதாயத்தில் எடுத்துக் கொண்டால், எத்தனை குழுக்கள், எத்தனை பிரிவுகள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு, பிளவுபட்டுக் கிடக்கிறோம். தன்னுடைய கொள்கை, சித்தாந்தம், விருப்பு, வெறுப்புகளுக்கு ஒத்துப் போகும் நபரை மட்டுமே ஏற்றுக் கொண்டு வாழ்வது சமூகத் தொடர்பிலிருந்து நம்மை விலக்கி வைத்துவிடும். இந்தப் போக்கு பிரிவினைக்கு வழிவகுக்கும். விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்மைச் சுற்றியிருப்பவர்களை அவர் யாராக இருந்தாலும், அவரது இயல்புத்தன்மையோடு ஏற்றுக்கொண்டு அன்பை வெளிப்படுத்துபவர்கள் அனைவரும் விரும்பும் நபராக இருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?.

- என்.ஹரிஹரன்

× RELATED யோகா அனைவருக்கும் சொந்தமானது : பிரதமர் மோடி பேச்சு