பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்தேன்...

நன்றி குங்குமம் தோழி

‘‘அடிப்படையில் நான் ஒரு ஆசிரியராகத்தான் என்னுடைய கேரியரை ஆரம்பிச்சேன். அதன் பிறகு மேலே படிப்படியா படிச்சேன். ஒவ்வொரு கட்டமாக உயர்ந்து பள்ளியின் தலைமை பேராசிரியரானேன். அதனை தொடர்ந்து தற்போது ‘பாசிபில் ஸ்போக்கன்’ என்ற ஆங்கிலம் பயிற்சி மையம் ஒன்றை நிர்வகித்து வருகிறேன்’’ என்று பேசத் துவங்கினார் மதுரையை சேர்ந்த கிரேஸ் ராணி.

‘‘நான் சின்ன பெண்ணாக இருக்கும் போதே எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. அதுக்காக நான் நிறையவே கஷ்டப்பட்டேன். காரணம் வறுமை. என்னுடைய அப்பா கோஆப்பரேடிவ் வங்கியில் வேலைப் பார்த்து வந்தார். அந்த வங்கியை சில காரணங்களால் மூடிட்டாங்க. அதனால் அப்பாக்கு வேலை இல்லாம போயிடுச்ச. நான், அக்கா, அண்ணன்னு நாங்க மூணு பேர். குடும்பத்துக்காக அப்பா ஒரு லட்ச ரூபாய் கந்து வட்டிக்காரரிடம் வேறு கடன் வாங்கி இருந்தார். இப்போது அப்பாவுக்கு வேலை வேறு இல்லை என்பதால், கடன் தொகையும் அதிகமானது. அதனால் நாங்க எங்க வீட்டை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வாழ்ந்த வீட்டை கடன் தொல்லைக் காரணமாக நாங்க விற்கும் போது ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருந்தது. அதனால் நாங்க வீட்டை இழந்து வாடகை வீட்டிற்கு குடிப் பெயர்ந்தோம். இதனாலேயே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் வளர்ந்தேன். நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவேனா என்பதே எனக்கு சந்தேகமா இருந்தது. அதற்கான கட்டணம் கட்ட பணம் இல்லை. இன்னும் சொல்லப்போனா ஒரு வேளை சாப்பாடு தான் நாங்க பல நாட்கள் சாப்பிட்டு இருக்கிறோம். அந்த கடன் தொல்லையால் ரொம்பவே நான் மனதால் பாதிக்கப்பட்டு இருந்தேன்.

என்னுடைய முழு நோக்கம் நன்றாக படிக்கணும் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது தான்’’ என்றவர் வேலைப் பார்த்துக் கொண்டே கல்லூரியில் படித்துள்ளார். ‘‘பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் பாட்டு போட்டி நடைப்பெற்றது. நான் படிச்சது கிருஸ்துவ பள்ளி என்பதால், சிஸ்டர் தான் தலைமை ஆசிரியரா இருந்தாங்க. நான் பாடிய பாடல் எல்லாருக்கும் பிடிச்சு இருந்தது. 45 பேர் அந்த போட்டியில் பங்குபெற்றாங்க. அதில் எனக்கு முதல் பரிசு கிடைச்சது. என்னுடைய திறமையை பாராட்டி தலைமை ஆசிரியர் எனக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டார். அதற்கு நான் ஒரே பதில் தான் சொன்னேன். எனக்கு கல்வி அறிவு வேணும்ன்னு சொன்னேன்.

உடனே அவர் என் பின்னணியை பற்றி விசாரித்தார். அதன் பிறகு பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை என்னுடைய கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொண்டார். நான் என் முழு திறமையை வெளிப்படுத்தி படிச்சேன். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதால் ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைப் பார்த்து அதில் வந்த வருமானத்தைக் கொண்டு நான் கல்லூரிப் படிப்பை படித்து முடித்தேன். இதற்கிடையில் என்னுடைய அக்காவும் அண்ணனும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களும் என்னுடைய படிப்புக்கு உதவி செய்தாங்க. படிப்பு முடிச்ச கையோடு பள்ளியில் ஆசிரியரா வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கும் படிப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் தேர்ச்சி பெற்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். வாழ்க்கையில் நிறைய அடிபட்டுட்டேன். ஆனால் நான் மனம் தளரவில்லை. எல்லாத்தையும் எதிர்த்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்தேன்’’ என்றவர் தன் மகளுக்காக பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். ‘‘நான் முக்கிய பொறுப்பில் இருப்பதால், எனக்கு வேலை மட்டும் இல்லாமல் மற்ற முக்கிய பொறுப்புகளும் இருந்தது. ஒரு தனி நபராக குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்ததால், நான் வேலையை ராஜினாமா செய்தேன். அதற்காக வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் வீட்டிலேயே டியூஷன் எடுத்தேன், பேச்சாளராக மாறினேன், ‘Possible English’ என்று முகநூலில் என்னுடைய பேச்சினை பதிவு செய்து வெளியிட்டேன்.

அது தான் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் வாய்ஸ் ரெக்கார்டிங் மட்டுமே செய்து வந்த நான் பிறகு வீடியோவும் வெளியிட ஆரம்பிச்சேன். நான் பதிவு செய்வது எல்லாமே மனம் சார்ந்த விஷயங்கள் தான். என்னுடைய பேச்சினை கேட்ட பலர் கவுன்சிலிங் தரச்சொல்லி என்னை அணுகினார்கள். முகநூல் மூலமாக தான் எனக்கான அடையாளம் கிடைத்தது. என்னிடம் மனநல ஆலோசனைக்காக வந்தவர்களில் பலர் தற்போது அவர்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர்’’ என்றவர் ‘Speak English Within 16 Hours’ என்ற ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘‘நான் புத்தகம் எழுதியதற்கும் ஒரு காரணம் இருக்கு. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு ஆங்கில பாடம் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை தான் படிச்சேன். எனக்கு மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க பிடிக்கும். அதனாலேயே ஆசிரியராக வேண்டும் என்ற ஒரே காரணத்தால் தான் ஆங்கிலம் எடுத்து படிச்சேன். படிக்க வேண்டும் என்றுதான் படிச்சு தேர்ச்சியும் பெற்றேன். படிப்பு முடிச்சிட்டு ஒரு நேர்காணலுக்காக சென்ற போது, என்னிடம் சொன்னது ஆங்கிலத்தில் இலக்கணம் மிகவும் அவசியம். அதை பிழை இல்லாமல் பேசவோ எழுதவோ தெரிந்து இருக்கணும்.

அவர்கள் அப்படி சொன்னதுமே ஆங்கில இலக்கணம் குறித்த ஆய்வு எடுக்க ஆரம்பிச்சு படிச்சேன். அப்படி நான் ஆய்வு செய்ததை தான் பேப்பர்களில் எழுதி வைத்திருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய மாணவன் நான் காகிதத்தில் எழுதி இருந்ததை அழகான புத்தகமாக வடிவமைத்துக் கொடுத்தான். அப்படித்தான் இந்த புத்தகம் உருவானது. இதில் ஆங்கிலத்தை மிகவும் எளிதாகவும் புரியும் படி சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் மிகவும் முக்கியமானது எது என்றும் இந்த புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். ஆங்கில பாடம் குறித்த அனைத்து சந்தேகங்களும் இதில் உள்ளன. 50 ஆங்கில வார்த்தைகள் நினைவில் இருந்தால் ஐந்து மணி நேரத்தில் கூட ஆங்கிலம் பேசலாம்’’ என்றவர் தன்னிடம் வரும் கவுன்சிலிங் புகார்கள் குறித்து விவரித்தார்.  

‘‘ஒரு முறை ஒருவர் எனக்கு ஃபோன் செய்தார். அவருக்கு ஒரு பெண்மணியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர் அந்த பெண்மணியை தாய் ஸ்தானத்தில் பார்த்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் அந்த பெண்ணின் மேல் அதிக அளவு பாசம் வைக்க ஆரம்பித்தார். அதுவே அவரின் மனநிலையை பாதிக்க ஆரம்பித்தது. என்னுடைய முகநூலில் உள்ள வீடியோவை பார்த்தவர் என்னை தொடர்பு  கொண்டார். அவரிடம் ஒரு நபரை தாய் ஸ்தானத்தில் வைத்தாலும், அது மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும். அதனால் எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதை உணர்ச்சிபூர்வமாக அணுகாமல் இருப்பதே நல்லதுன்னு அவருக்கு புரிய வைத்தேன்.

அவரும் புரிந்துகொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். என் மூலமாக ஒருவர் சுகமாக இருக்கிறார் என்று நினைக்கும் போதே பெரிய அளவில் சாதனை படைத்தது போன்ற திருப்தி ஏற்படும். மேலும் வசதியற்ற குழந்தைகளுக்கும் ஆங்கிலம் இலவசமாக சொல்லித் தருகிறேன். என்னுடைய எதிர்கால நோக்கம் உலகளாவிய அளவில் பலருக்கு மனநிலை சார்ந்த கவுன்சிலிங் அளிக்க வேண்டும். கிராமப்புற குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி இலவசமாக கொடுக்க வேண்டும்’’ என்கிறார் கிரேஸ் ராணி.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: அன்னம் அரசு

Related Stories: