ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை: ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த பிரபலங்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஷ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் சிலர் இறந்துள்ளனர். எனவே, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளை சந்தைப்படுத்தும் விளம்பரங்களில் நடித்த திரைப்பட நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, சுதீப், நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, சவ்ரவ் கங்குலி உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ‘‘ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மதுரையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். எனவே, ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும்’’ என்றார். மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் உள்ளிட்ட சிலர் ஆஜராகி, ‘‘ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான சில வழக்குகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த மனு விளம்பர நோக்கத்துக்காக செய்யப்பட்டுள்ளது’’ என வாதிட்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘‘இந்த மனுவில் பொதுநல நோக்கம் கிடையாது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் உரிய இடத்தில் முறையிட்டு நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,’’ என்றனர்.

Related Stories: