×

7,569 பேர் பட்டம் பெற்றனர் வேலூர் விஐடி 36வது பட்டமளிப்பு விழா

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் காணொலி காட்சி மூலம் 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டில் 14 கோடி இளைஞர்களில் 4 கோடி பேருக்கே உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. உயர்கல்விதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். நம் நாட்டில் உயர்கல்வி சந்தித்து வரும் முக்கியமான சவால்களில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய ஆராய்ச்சியாளர்கள் இல்லாதது, போதிய நிதி வசதி இல்லாமை, கல்வி மற்றும் நிர்வாகத்தில்  தன்னாட்சி இல்லாமையே ஆகும்.

விஐடியில் கடந்த ஆண்டு 844 உள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க  முன்வந்தன. மாணவர்கள் வேலையை தேடி செல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பொருட்களை  ஏற்றுமதி செய்வதற்கும், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் போதுமான வசதி நம்மிடம் உள்ளது. இவை அனைத்தும் பிரதமரின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டம் மூலம் செயல்படுத்த முடியும்.இவ்வாறு வேந்தர் விசுவநாதன் பேசினார்.

சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவர்கள் பாடங்களை ஆழமாக படித்து அதன் நுணுக்கங்கள் மற்றும் கருவை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் இளநிலை மற்றும் முதுநிலை படித்த 7282 மாணவ, மாணவிகள், ஆராய்ச்சி படிப்பு படித்த 287 மாணவ, மாணவிகள் என மொத்தம் 7,569 பேர் பட்டங்களை பெற்றனர்.  இவர்களில் 57 பேர் தங்கப்பதக்கங்களை பெற்றனர். விழாவில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்யநாராயணன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Vellore ,VIT 36th Graduation Ceremony , 7,569 graduated at Vellore VIT 36th Graduation Ceremony
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை