ரூ.1 கோடி நிலத்தை அபகரிக்க தொழில் அதிபருக்கு மிரட்டல் தமமுகவினர் 7 பேர் கைது: ஜான்பாண்டியனுக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை

கோவை: கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் தீபக் அரோரா (39). தொழில் நிறுவன உரிமையாளர். இவர், கணபதி மணியகாரன்பாளையம் பகுதியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வாங்கி குடோன் அமைத்தார். இந்த குடோனில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள், ஹெல்மெட் மற்றும் பல்வேறு பொருட்களை வைத்திருந்தார். இந்நிலையில், மணியகாரன்பாளையம் புண்ணியநாயக்கன் தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (52), லட்சுமி நகரை சேர்ந்த சந்தோஷ் (52), ஜெகன் (40), தீபன் (36), விடிஎஸ் நகரை சேர்ந்த மதன் (33), கதிரவன் (49), கணபதி பகுதியை சேர்ந்த கருப்புசாமி (35) ஆகியோர் குடோனில் புகுந்தனர். நாங்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எனக்கூறி இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும் நீங்கள் குடோனை காலி செய்யவேண்டும் எனவும் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

உடனே, தீபக் அரோரா, ‘இந்த இடத்தின் பத்திரம் என் பெயரில் இருக்கிறது. நீங்கள் இந்த இடத்தை சொந்தம் கொண்டாட முடியாது’ எனக்கூறினார். ஆனால், இதை கேட்காமல் 7 பேரும் தீபக்அரோராவை, குடோனை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு எனக்கூறி தாக்கியதாக தெரிகிறது. மேலும், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிந்து 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். கைதான 7 பேரும் கைது த.ம.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கந்தசாமி கூறுகையில், ‘‘கைதான 7 பேரும், தலைவர் ஜான்பாண்டியன் கூறியபடிதான் செயல்பட்டோம். அவர்தான் மிரட்ட சொன்னார்  எனக்கூறினர். இவர்களின் வாக்குமூலத்தின்படி ஜான்பாண்டியன் தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: