திருப்பத்தூரில் காதல் மனைவியை எரித்து கொன்றுவிட்டு சென்னையில் நர்சிங் மாணவியை கடத்திய வாலிபர்: தனிப்படை போலீசார் விசாரணை தீவிரம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28), டிரைவிங் ஸ்கூல் வைத்துள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி அதிகாலை கோயிலுக்கு செல்வதாக கூறிய சத்தியமூர்த்தி, தாய் வீட்டில் இருந்த மனைவி திவ்யா, குழந்தையை காரில் அழைத்துச்சென்றார். இலவம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் சென்றபோது கை, கால் வலிக்கான மாத்திரை என்று தூக்க மாத்திரையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட திவ்யா மயங்கினார்.

அவரை அருகே உள்ள விவசாய நிலத்துக்கு தூக்கிச்சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு குழந்தையுடன் தப்பியோடிவிட்டார்.  இதையடுத்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் தேதி இறந்தார். இதையடுத்து திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில், சத்தியமூர்த்தி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காரை நிறுத்திவிட்டு குழந்தையுடன் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதன்பின், காரை பறிமுதல் செய்த போலீசார், சத்தியமூர்த்தியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் சத்தியமூர்த்தி டிரைவிங் ஸ்கூலுக்கு வந்த சில பெண்களிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், எனவே அவர் கள்ளக்காதலி வீட்டில் பதுங்கியிருக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர். அதன்படி விசாரித்ததில் போரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வரும் மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பூந்தமல்லி போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியையும், அவரை கடத்தியதாக கூறப்படும் சத்தியமூர்த்தியையும் பூந்தமல்லி போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்ற தனிப்படை போலீசாரும் சென்னையில் முகாமிட்டு சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>