மேல்மருவத்தூரில் அமைந்துள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா? கலெக்டர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, மேல்மருவத்தூரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் ‘கீழ் மருவத்தூர்’ ஏரி இருந்தது. கடந்த 2015ல்  இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைளும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories:

>