கொடுத்த கடனை திருப்பி கேட்ட அரிசி வியாபாரிக்கு சரமாரி அடி: ஆசிரியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்விஎன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மணி (67). அரிசி மற்றும் நெல் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ராயன்குட்டை தெருவை சேர்ந்த கன்னியப்பன் மகன் சக்திவேல் என்பவர், மணிக்கு அறிமுகமானார். சக்திவேல் டிராவல்ஸ் உரிமையாளர் ஆக இருந்து வந்துள்ளார். சக்திவேல், தனது சகோதரரான ஆசிரியர் சேகர் என்பவரை மணிக்கு அறிமுகப்படுத்தினார். இதைதொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சகோதரர்கள் இருவரும் மணியிடம் டிராவல்ஸ் தொழில் செய்ய ரூ.5 லட்சம் தேவைப்படுவதாகவும், அதற்கான வட்டியை முறையாக தருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து மணி, அவர்கள் கேட்டபடி, பணத்தை கொடுத்தார். அப்போது, அந்த பணத்தை டிசம்பர் மாதம் திருப்பி கொடுப்பதாக கூறி, வங்கி காசோலையை அளித்தனர்.

அதனை மணி வங்கியில் செலுத்தியபோது, காசோலை கையெழுத்து சரியில்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி, அவர்களிடம் மணி தெரிவித்துள்ளார். அதற்கு, மீண்டும் ஒரு காசோலை வழங்கினர். அந்த காசோலையும் திரும்ப வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சக்திவேல், ஆசிரியர் சேகர்  ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது அங்கு சென்ற மணி, தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள், பொது இடத்தில் வைத்து, அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், மணியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணி, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மணி, எஸ்பி சுதாகரிடம் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து எஸ்பியின் உத்தரவின்படி, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சக்திவேல் மற்றும் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.

Related Stories:

>