வழிப்பறி வாலிபர்களை விரட்டி பிடித்த காவலர்: எஸ்பி வருண்குமார் பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அய்யனார் அவென்யூவை சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். வீடு தேடி மருத்துவ திட்டத்தின், வாகன ஓட்டுநராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இமானுவேல் ராஜசேகர், தனது செல்போனில் பேசிக் கொண்டே ஜேஎன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் 3 பேர், அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு வேகமாக சென்றனர். அந்த நேரத்தில், அவ்வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் முருகேசன், தனது பைக்கில் அவர்களை விரட்டி சென்று, திருவள்ளூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் மடக்கி பிடித்தார்.

உடனே மர்மநபர்கள், காவலர் முருகேசனை சரமாரியாக தாக்கினர். ஆனாலும் அவர், 2 பேரை மடக்கி பிடித்தார். ஒருவர் தப்பிவிட்டார். தகவலறிந்து  திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அங்கு சென்று 2 பேரையும், பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றார். விசாரணையில், ராஜாஜிபுரம் கஜா (எ) கஜேந்திரன் (22), ஆவடி அருகே கோயில் பதாகை, கலைஞர் கருணாநிதி நகர், 3வது தெருவை சேர்ந்த மதன்குமார் (22), தப்பியவர் கோயில் பதாகை விஜய் என தெரிந்தது.

இதில் கஜேந்திரன் மீது, கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளும், மதன்குமார் மீது வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான விஜயை வலைவீசி  தேடி வருகிறார். இந்த சம்பவத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் கொள்ளையர்களை விரட்டி சென்று, அவர்களது தாக்குதலை சமாளித்து 2 பேரை மடக்கி பிடித்து செல்போனை கைப்பற்றிய ஆயுதப்படை காவலர் முருகேசனை, எஸ்பி வருண்குமார் தனது அலுவலகத்துக்கு அழைத்து ரூ.1000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories: