ஊத்துக்கோட்டை ஆற்றின் குறுக்கே இறுதி கட்டத்தை நெருங்கிய மேம்பால பணி: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆய்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனை, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஊத்துக்கோட்டை -  திருவள்ளுர் நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே கடந்த 14.10.1928ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், காளஹஸ்திரி, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த அரசு, தனியார் கம்பெனி ஊழியர்களும், பொதுமக்களும் ஊத்துக்கோட்டை வந்து இந்த தரைப்பாலத்தை கடந்து மாவட்ட தலைநகரான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

மேலும், ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, பென்னலூர்பேட்டை உள்பட 50 கிராம மக்கள், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊத்துக்கோட்டைக்கு வர வேண்டும்.

கடந்த 2015 நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழையால், ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பி திறக்கப்பட்டது. இதனால், ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கி 50 கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, 33 நாட்கள் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் பெரியபாளையம், வெங்கல் வழியாக 40 கிமீ சுற்றிக்கொண்டு வேலைக்கு சென்றனர்.

தொடர்ந்து, இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், மேற்கண்ட பகுதியில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி, மேம்பாலம் பாலம் கட்டுவதற்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2018 ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பாலத்தை 18 மாதங்களில் முடிக்க வேண்டும். ஆனால், பாலம் கட்ட காலதாமதம் ஆனது. பின்னர், கொரோனா ஊரடங்கால், சில மாதங்கள் பணிகள் பாதிக்கப்பட்டு, மீண்டும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

இந்நிலையில், கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று முன்தினம் மாலை ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மேம்பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, அவர், அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் பணிகளை முடிப்பதாக கூறினர். மேலும், மழை காலம் நெருங்க உள்ளதால் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம், எம்எல்ஏ கேட்டு கொண்டார். அவருடன் திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, குமார் ஆகியோர் இருந்தனர்.

Related Stories:

>