வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை வடசென்னையில் நீர்நிலை, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும்  பணிகளை நேற்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டேரி நல்லா கால்வாய், பாடி மேம்பாலம் அருகில் தொடங்கி வடசென்னை  வடக்கு பக்கிங்காம் கால்வாயின் பேசின் பாலம் அருகில் வந்து இணைகிறது.  வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.84 மீட்டர் நீளமுள்ள இக்கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுகளை ரூ.44 லட்சம் மதிப்பில் கனரக வாகனங்கள் மற்றும் மிதவை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்ட்ரான்ஸ் ரோடு மற்றும் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் நீர்வள ஆதார துறையின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொளத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 30 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் 769 கி.மீ நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 33 கி.மீ.  நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.102.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்  பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாதவரம் மண்டலம், பிரிட்டானியா நகரில் மழைக்காலங்களில்  தேங்கும் வெள்ள நீரையும் மற்றும் கலெக்டர் நகர், செந்தில் நகர், வேலம்மாள் நகர், ஐஎன்டியூசி நகர்,  பிர்லா அவென்யூ, ரங்கா அவென்யூ, ராசி நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 31 கி.மீ.  நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.122.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்  பணிகளை முதல்வர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர்நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளவும், முழுமையாக இப்பணிகளை முடிக்க கூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அனைத்துத் துறை அதிகாரிகளும் அளித்திடவும் அறிவுறுத்தினார். அப்போது, , இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: