ரூ.450 கோடியில் உருவாகும் ஒரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு ஒன்றிய அரசு அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2021-22ம் ஆண்டின் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் ஒரு மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி உதவி வேண்டி ஒன்றிய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கருத்துரு அனுப்பி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியிருந்தேன்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்திய அளவில், நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காக்களை அமைக்க ஒன்றிய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வரிசையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்திலும் இந்த மருத்துவ சாதனங்கள் பூங்கா அமையும். இத்திட்டத்தின் மூலம், ஒரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அதிகபட்சமாக ரூ.100 கோடி நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்கும். இந்த மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்காவானது ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 350 எக்கர் நிலப்பரப்பில், சுமார் 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட பூங்காவாகத் திகழும்.

இப்பூங்காவானது மருத்துவத் துறையின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, மருத்துவ சாதனங்களான வெண்டிலேட்டர்கள், பிபி திரைகள் பேஸ்மேக்கர்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண் மற்றும் பல் உள்வைப்புகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக அமையப்பெறும். இம்மருத்துவ சாதனங்கள் பூங்கா சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்ப்பதுடன், 10,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை  ஏற்படுத்தும். தமிழ்நாடு இந்தப் பூங்காவின் மூலம் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியிலும் உலகளவில் ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக உருவாகும்.

Related Stories: