மூன்று ஆண்டு இழுபறிக்கு பிறகு காவிரி ஆணையத்துக்கு முழு நேரத் தலைவர்: ஒன்றிய அரசு நியமித்தது

புதுடெல்லி: மூன்று ஆண்டு இழுபறிக்கு பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தரை ஒன்றிய அரசு நியமனம் செய்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஒன்றிய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளிலும் 4 மாநிலங்கள் தரப்பில் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஆணைய கூட்டத்தின் போது அணை மற்றும் நீர் பங்கீடு குறித்த பிரச்னைகளையும், அதே போன்று ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது அணை பாதுகாப்பு நிலவரங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரப்படுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முதன் முதலாக மசூத் உசேன் முழு நேர தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் ஓய்வு பெற்ற பிறகு, ஒன்றிய நீர்வளத் துறையின் தலைவராக இருந்தவர்களே காவிரி ஆணையத்தின் தலைவராக இருந்து வந்தனர். அருண் குமார் சின்காவில் தொடங்கி, நேற்று முன்தினம் ஆணைய கூட்டம் நடத்திய எஸ்.கே.ஹல்தர் வரையில், அனைவருமே இடைக்காலத் தலைவராக மட்டுமே நீடித்து வந்தனர்.

இதனால், ‘காவிரி ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான், மேகதாது உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளில் அதிகாரமிக்க உத்தரவை பிறப்பிக்க முடியும்,’ என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், மூன்று ஆண்டு இழுபறிக்குப் பிறகு ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ‘ஒன்றிய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக இருக்கும் சாமித்ரா குமார் ஹல்தர் (எஸ்.கே.ஹல்தர்), காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட முழு நேரத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டுகள். காவிரி நீர் ேமலாண்மை ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளையும் இவர் கண்காணிப்பார்,’ என கூறப்பட்டுள்ளது.

* பதவிக்காலம் நவம்பர் 30ல் நிறைவு

ஒன்றிய நீர்வளத்துறையின் தலைவராக இருக்கும் ஹல்தரின் பதவிக் காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில்தான், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நிரந்தர தலைவராக, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அவர் முழு நேர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கர்நாடகாவுக்கு கறார் உத்தரவு பிறப்பித்தவர்

சமீபத்தில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்னையை கர்நாடகா கிளப்பியது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, ஹல்தர் குறுக்கிட்டு, ‘காவிரி நீரை பயன்படுத்தும் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் மட்டும்தான் மேகாதாது அணை குறித்து, ஆணையத்தில் கூட்டங்களில் விவாதிக்கவே முடியும். இல்லை என்றால், மேகதாதுவில் கண்டிப்பாக கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது,’ என உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: