×

குலாப் புயலுக்கு பின் மரத்வாடாவில் கனமழை வெள்ளத்தில் 10 பேர் பலி: 160 கிராமங்கள் மிதக்கின்றன

அவுரங்காபாத்: குலாப் புயலுக்குப் பின் மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழைக்கு கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 பேர் பலியாகினர். 160 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஆந்திரா - ஒடிசா இடையே கடந்த 26ம் தேதி கரையை கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, மும்பை புறநகர் மற்றும் மராத்வாடாவில் அவுரங்காபாத், லாத்தூர், உஸ்மனாபாத், பர்பனி, நான்டெட், பீட், ஜால்னா மற்றும் ஹிங்கோலி ஆகிய 8 மாவட்டங்களில் கடந்த ஞாயிறு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சராசரிக்கும் அதிகமாக 65 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. கன மழை காரணமாக ஆறுகளும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மன்ஜாரா, மஜல்காவ் அணைகள் நேற்று காலை திறந்துவிடப்பட்டன.

அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் லாத்தூரில் 158 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக மராத்வாடாவில் கடந்த 48 மணி நேரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 205 கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மராத்வாடா மண்டலத்தில் பல லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நேற்று பிற்பகலில் இருந்து மும்பை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கன மழை பெய்தது. இன்றும் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

* அடித்து செல்லப்பட்ட பஸ்
மகாராஷ்டிராவில் யவாத்மால் மாவட்டம் உமர்கேட் தாலுகாவில் உள்ள தஹாகாவ் பகுதியில் உள்ள நேற்று காலை தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, நாக்பூருக்கு சென்ற அரசு பேருந்து அவ்வழியே வந்தது. இதில் 8க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வெள்ளம் செல்வதால் பாலத்தில் செல்லவேண்டாம் என  பொதுமக்கள் டிரைவரிடம் எச்சரித்தனர். ஆனால் அவர் அதை அலட்சியப்படுத்தி விட்டு வேகமாக ஓட்டி சென்றார். அப்போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் பாலத்தின் பள்ளத்தில் கவிழ்ந்து, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. கிராமவாசிகள் உடனடியாக நீந்தி சென்று கயிற்றை கட்டி பஸ்சில் இருந்த சிலரை உயிருடன் மீட்டனர். ஒரு பயணி மட்டும் நீரில் மூழ்கி பலியானார். கண்டக்டர், நடத்துனர் மற்றும் ஒரு பயணியின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. மீட்பு பணிகள் நடக்கின்றன.

Tags : Marathwada ,Gulab , 10 killed in heavy rains in Marathwada after Gulab storm: 160 villages floating
× RELATED குலாப் புயல் காரணமாக நீர்பிடிப்பு...