×

ஒன்றிய அரசுப்பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடக்குறிப்புகள் இணையத்தில் பதிவேற்றம்: தமிழக அரசு தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வுக்கு, தமிழக இளைஞர்கள் தயாராகும் வகையில் பாடக்குறிப்புகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில், பல்நோக்கு பணியாளர், பெண்கள் படைப்பயிற்றுநர், மருத்துவ உதவியாளர், பொறுப்பாளர் போன்ற 3,261 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.  இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2021 ஆகும்.

பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் பணிநியமனம் பெறுவதற்கு ஏதுவாக இப்போட்டித்தேர்விற்கான அனைத்து பாடக்குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ‘tamilnaducareerservices.tn.gov.in’ என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இப்போட்டித்தேர்வினை எழுத விரும்பும் இளைஞர்கள் இவ்விணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இதுமட்டுமின்றி,  அனைத்து அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கும் தேவையான பாடக்குறிப்புகள்  இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Union Public Service ,Tamil Nadu , Curriculum in preparation for the Union Public Service Competitive Examination uploaded on the Internet: Government of Tamil Nadu Information
× RELATED தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு...