நாடு முழுவதும் அக்.1ம் தேதி அமலாகிறது ஆயுத தொழிற்சாலை வாரியங்கள் கலைப்பு: 7 பொதுத்துறை நிறுவனங்களுடன் சேர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளின் வாரியங்கள் கலைக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவு வரும் அக்டோபர் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இவற்றின் சொத்துக்கள், ஊழியர்கள், நிர்வாகம் ஆகியவை 7 பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் சேர்க்கப்பட உள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் 41 ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில் ஆவடியிலும், திருச்சியிலும் ஆயுத தொழிற்சாலை அமைந்துள்ளது. இவைகளில் சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே ஆயுத தொழிற்சாலை வாரியங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு இணை துறையாக செயல்பட்டு வருகின்றன.

இங்கு, டேங்குகள் உள்ளிட்ட கவச வாகனங்கள், பீரங்கிகள்,  சிறிய மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள்,  வெடிபொருள்கள், துப்பாக்கி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. படை வீரர்களுக்குத் தேவையான சீருடைகள், கூடாரங்கள்,  காலணிகள் போன்றவையும் இங்கு  தயாரிக்கப்படுகின்றன. இந்திய ராணுவமே ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் முக்கிய வாடிக்கையாளராக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆயுத தொழிற்சாலை வாரியங்களை கலைக்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் ஆயுத தொழிற்சாலைகளின் வாரியங்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கலைக்கப்பட்டு, அதன் 41 உற்பத்தி பிரிவுகளின் சொத்துக்கள், நிர்வாகம், கட்டுப்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை 7 பொதுத்துறை நிறுவனங்களுக்கு (முழுமையாக ஒன்றிய அரசுக்கு சொந்தமானவை) பிரித்து தரப்படுகிறது. 41 தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களும் (குரூப் ஏ,பி,சி) புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்றப்படுவர். அந்நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கான தனித்தனி விதிமுறைகளை வகுக்கும். அதே சமயம், ஊழியர்களின் சம்பளம் குறைவாக நிர்ணயிக்கப்படுவதை தடுக்க, பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் தனிக்குழு அமைத்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தனியார் மயத்தின் ஆரம்பம்

ஆயுத தொழிற்சாலை வாரியங்கள் கலைக்கப்படுவது, இந்த தொழிற்சாலைகளை தனியார் மயம் செய்வதற்கான ஆரம்பகட்ட அணுகுமுறை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கனவே  பல பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியார்மயமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

* கலைப்பது ஏன்?

ஆயுத தொழிற்சாலைகளிடம் இருந்து மட்டுமே பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள தளவாடங்கள் தற்போது பொதுச் சந்தையில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருள்களின் தரம் மிகக் குறைவாக உள்ளது குறித்து ராணுவப் படைகள் தொடர்ந்து கவலை தெரிவிப்பதாலும், செலவுகள் அதிகமாக இருப்பதாலும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விலை மிக அதிகமாக இருப்பதாக ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனமாக்கப்படுகின்றன.

Related Stories:

>