சுற்றுச்சூழலை பாதிக்கும் என தெரிந்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தியாளர்கள் தயாரிப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: ‘தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன்?’ என உற்பத்தியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை வெடிப்பது, உற்பத்தி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், ‘இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால், பட்டாசு வெடிப்பதற்கான காலத்தை தினமும் 2 மணி நேரம் என்பதை மாற்றி, காலை 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போப ண்ணா அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நத்கர்னி, “பண்டிகை காலம் என்பதால் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், பட்டாசு உற்பத்தி, வேலை வாய்ப்பு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ,’ என வாதிட்டார்.

பட்டாசுக்கு தடை கோரியவர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், “உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு உற்பத்தியாளர்கள் பேரியத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது பற்றி சிபிஐ விசாரித்து, அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்துள்ளது. அதில், பட்டாசு உற்பத்தியாளர்கள் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டது உறுதியாகி இருக்கிறது. தற்போது, வெறும் 5 வகையான பட்டாசுகள் மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறிய விதிமுறைகளை பின்பற்றப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பசுமை பட்டாசுகளாகும்.

ஆனால், 300 வகையான பட்டாசுகள் விதிகளை மீறி விற்பனை செய்யப்படுகிறது. இவை கடுமையான சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தக்கூடியவை. பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்த, ஒன்றிய அரசும் மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது. பட்டாசுகளை தயாரித்து விநியோகம் செய்வது என அனைத்திலும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றன. அதனால், பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்,’’ என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பட்டாசுகளை வெடிக்கவும், தயாரிக்கவும் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ஒரு சிலர் மீறுவதால், பல அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

பட்டாசு வெடிக்க தடை விதித்ததால், நிறைய பேர் வேலை இழந்துள்ளனர் என்பதை ஏற்று கொள்கிறோம். அதே நேரம், ஒரு சிலர், பலரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்கும் என தெரிந்தும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன்? அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள், மத நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் பட்டாசுகள் வெடிப்பதை நாங்களே பார்க்கிறோம். அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தானே? தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எதற்காக தயாரிக்கிறீர்கள்?. மேலும், பெரிய சரவெடிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை வெடிக்கப்படுவதை இப்போதும் கூட காண முடிகிறது,’’ என உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories:

>