தமிழக போலீசாரின் மரபை போற்றும் வகையில் ரூ.6.47 கோடியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழக போலீசாரின் மரபை போற்றும் வகையில், ரூ.6.47 கோடியில் ‘தமிழ்நாடு காவல் அருங்காட்சியத்தை’ நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். அப்போது அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். தமிழக காவல் துறையின் மரபுகளை போற்றும் வகையில் ‘தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்’ சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க காவல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.  

பிறகு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய ஆயுதங்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவர் தமிழக காவல் துறைக்கு வழங்கிய பதக்கங்களை பார்வையிட்டார். அப்போது அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை குறித்து கலந்துரையாடினார். அப்போது, அரசு பள்ளி மாணவர்கள் காவல் துறை தொடர்பான சந்தேகங்களை முதல்வரிடம் கேட்டறிந்தனர்.  அப்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உள்துறை செயலாளர் பிரபாகர், தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் ஏ.ேக.விஸ்வநாதன், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ரூ.6.47 கோடி மதிப்பீட்டில் எழும்பூரில் உள்ள பாரம்பரிய மிக்க பழைய காவல் ஆணையர் கட்டிடத்தில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் 24,000 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வைக்காக நாளை 30ம் தேதி வரை இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. அக்டோபர் 1ம் தேதி முதல் அருங்காட்சியகத்தை பர்வையிட வரும் அரசு பள்ளி மாணவர்களை தவிர மற்ற அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>