கோயில்களில் தமிழில் அர்ச்சனை: உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

சென்னை: தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் திட்டத்தை எதிர்த்து ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு கடந்த 3ம் தேதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், ‘‘கடந்த 2008ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை.

இதில் குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,”மத விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. அதேப்போன்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்கு அடுத்த ஓரிரு நாளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: