×

ஒரகடத்தில் ரூ.450 கோடியில் அமைக்கப்படும் மருத்துவ சாதன பூங்காவிற்கு ஒன்றிய அரசு அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

சென்னை: ஒரகடத்தில் ரூ.450 கோடியில் அமைக்கப்படும் மருத்துவ சாதன பூங்காவிற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், தொழில் பூங்காக்களும் குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்புப் பூங்காக்களும் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதனடிப்படையில், 2021-22ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் ஒரு மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி உதவி வேண்டி ஒன்றிய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கருத்துரு அனுப்பி ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியிருந்தேன். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று- தற்போது இந்திய அளவில், நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காக்களை அமைக்க ஒன்றிய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வரிசையில் - தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்திலும் இந்த மருத்துவ சாதனங்கள் பூங்கா அமையும்.

இத்திட்டத்தின் மூலம், ஒரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்கும். இந்த மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்காவானது ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 350 எக்கர் நிலப்பரப்பில், சுமார் 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அடிப்படைக் கட்டமைப்புடன் சிறப்புக் கட்டமைப்புகளான ஆய்வுக்கூடங்கள், முன்னோடி மாதிரி, திறன் மேம்பாட்டு மையம் முதலியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை வழங்குகிற ஒரு குடையின் கீழ் அமையப்பெற்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட பூங்காவாகத் திகழும்.

இப்பூங்காவானது மருத்துவத் துறையின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, மருத்துவ சாதனங்களான வெண்டிலேட்டர்கள், றிறி திரைகள் பேஸ்மேக்கர்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண் மற்றும் பல் உள்வைப்புகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக அமையப்பெறும். இம்மருத்துவ சாதனங்கள் பூங்கா சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்ப்பதுடன், 10,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை  ஏற்படுத்தும். மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும் இப்பூங்கா உலகளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

மருத்துவ வசதிகளுக்கு ஒரு புகழ்பெற்ற மையமாகத் திகழும் தமிழ்நாடு இந்தப் பூங்காவின் மூலம் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியிலும் உலகளவில் ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக உருவாகும் என தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Union Government ,Orkadaa ,Q. Stalin , Government approves Rs 450 crore medical device park in Oragadam: Chief Minister MK Stalin's statement ..!
× RELATED ஒரே நாடு, ஒரே மொழி எனக்கூறும் ஒன்றிய...