வரிசையில் நிற்க சொன்ன மருத்துவருக்கு தடுப்பூசி முகாமில் கத்திகுத்து

யவத்மால்: மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட வந்தவரை வரிசையில் நின்று போடச் சொன்ன மருத்துவர் மீது கத்திகுத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அடுத்த திக்ராஸ் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த ஒருவர், பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திக்ராஸ் போலீசார் கூறுகையில், ‘வசந்த் நகர் பகுதியில் தடுப்பூசி முகாம் நடந்தது.

குற்றம் சாட்டப்பட்ட மனோகர் ரத்தோர் (32) என்பவர் தடுப்பூசி மையத்திற்கு வந்தார். நீண்ட வரிசையில் மக்கள் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த நிலையில், இவர் வரிசை முறையை பின்பற்றாமல் தனக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவப் பணியாளர்களிடம் தகராறு செய்தார். பின்னர், அங்கிருந்த மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தோஷ் ஜாதவிடம், தன்னுடைய பெயரை முன்பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், மருத்துவ அதிகாரி, முன்பதிவு செய்ய மறுத்துவிட்டார்.

அதனால் கோபமடைந்த மனோகர் ரத்தோர், தான்மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் சந்தோஷ் ஜாதவை குத்தினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மருத்துவர், கத்திக் குத்து காயத்தில் இருந்து தப்பினார். இருந்தும், அவரது ஆடையின் மீது கத்தி பட்டதால் கிழிந்துவிட்டது. அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்ட மனோகர் ரத்தோரை பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: