சுற்றுசூழலை பாதிக்கும் தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை எதற்காக தயாரிக்கிறீர்கள்? : உச்ச நீதிமன்றம் காட்டம்!!

புதுடெல்லி : தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை தயாரிப்பது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி தீர்ப்பை வழங்கியது.

அதில், குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அதனை மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நேரத்தில் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம். மேலும் இந்த கால நேரம் என்பது தீபாவளி உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை அதே ஆண்டு கடந்த அகடோபர் 5ம் தேதி அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்ததத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை பட்டாசு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக நிர்ணயம் செய்துள்ள கால நேரத்தின் அளவை கூடுதலாக அதிகரிக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தியாளர்கள் மற்றும் விறப்பனையாளர் ஆகியோருக்கும் லாபம் ஈட்டும் விதமாக இருக்கும். குறிப்பாக நாள் ஒன்று இரண்டு மணி நேரம் என்பதை திருத்தி காலை 4மணி நேரம்,  அதேப்போன்று மாலை 4மணி நேரம் என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் ,மத நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் பட்டாசுகள் வெடிப்பதை நாங்களே நேரடியாக பார்கிறோம். அவை அனைத்தும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தான். தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை எதற்காக தயாரிக்கிறீர்கள்?. பெரிய பெரிய சரவெடிகள் நீதிமன்றத்தால் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்றும் கூட வெடிப்பதை காணமுடிகிறது என உற்பத்தியாளர்கள் தரப்புக்கு காட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: