நிர்வாண நிலையில் தைலமர காட்டில் ஆண் சடலம்; கொலை செய்து உடல் வீச்சு?.. கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தைலமர காட்டில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் கிடந்தது. கொலை செய்து உடல் வீசப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஜி.ஆர்.கண்டிகை அருகே பில்லாகுப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆடு, மாடு மேய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், நேற்று காலையில் வழக்கம் போல தைலமர காட்டுக்குள் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். மாலையானதும் வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். ஆடுகளை ஓட்டி கொண்டு வீட்டுக்கு திரும்பும்போது, சற்று இருள் சூழ்ந்திருந்தது. அந்த நேரத்தில், திடீரென ஆடுகள் அனைத்தும், ஒரு கருப்பு நிற உடலை கண்டு மிரண்டு ஓட ஆரம்பித்தது. இதனால் பயந்து போன அந்த பெண், அருகில் சென்று பார்த்தார். அழுகிய நிலையில் ஆண் சடலம் நிர்வாண நிலையில் கிடந்தது.

அதிர்ச்சியடைந்தார். உடனே பதறியடித்து கொண்டு ஆடுகளை வேகவேகமாக ஓட்டி கொண்டு வீட்டுக்கு திரும்பினார். யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தார். இரவானதும் என்ன செய்வதென்று தெரியாமல், அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். உடனே அவர்கள், சிப்காட் போலீசில் இரவு புகார் செய்தனர். போலீசார், இன்று காலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக இருந்தது. மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

காட்டுப்பகுதி என்பதால் காட்டு பன்றிகள், உடலை கடித்து குதறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மர்ம நபர்கள், அடித்து கொலை செய்து உடலை வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு வாரத்துக்கு முன்பே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: