கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி ஒவ்வொரு கட்டமாக ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம்! : ஐசிஎம்ஆர் நிபுணர்கள் குழு பரிந்துரை

புதுடெல்லி: கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி, நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டமாக ஆரம்பப் பள்ளிகளை திறக்கலாம் என்று ஐசிஎம்ஆர் நிபுணர்கள் குழு பரிந்துரைசெய்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை அச்சத்திற்கு மத்தியில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் 9 , 10, 11, 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த பள்ளிகளை திறப்பது குறித்து, மாநில அரசுகள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ என்ற இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘யுனெஸ்கோ அறிக்கையின்படி, கொரோனா கட்டுபாடுகள் அமலில் வந்ததில் இருந்து கிட்டத்தட்ட 500 நாட்களுக்கு மேலாக இந்தியாவில் 3.20 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி செல்லவில்லை. அதனால், அவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளிகளைத் திறக்கும் விசயத்தில், மற்ற வெளிநாடுகளில் பின்பற்றப்படும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், மீண்டும் பள்ளிகளை திறக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) நிபுணர்கள் தாணு ஆனந்த், பல்ராம் பார்கவா, சமீரன் பாண்டா ஆகியோரின் கூற்றுப்படி, கொரோனா காலம் முடிந்தவுடன் பள்ளிகள் திறப்பதே சிறந்தது. அதேநேரம், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கையை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தொடங்கலாம். ஒவ்வொரு கட்டமாக ஆரம்பப் பள்ளிகளை திறக்கலாம். அதேநேரம் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  பின்பற்ற வேண்டும். வைரஸ் பரவுவதை அறிய, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக ெகாரோனா பரிசோதனைக்கு பரிந்துரைப்பதே சிறந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>