இளம் வீரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டனர்: சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் பேட்டி

துபாய்: ஐபிஎல் தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த 40 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. தொடர்ந்து 5 தோல்விகளை கண்ட சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் லூயிஸ் 6 ரன்களுக்கு வெளியேறியதும், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சாம்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

சன்ரைசர்ஸ் அணியில் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் மற்றும் விருத்திமான் சகா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். விருத்திமான் சகா 18 ரன்களுக்கும், கார்க் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய வில்லியம்சன் 41 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.3 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 167 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விக்குப் பிறகு இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் சன்ரைசர்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன்  கூறுகையில், ‘‘வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எங்களது பேட்டிங்,  பவுலிங் திறன் முன்னேறியிருக்கிறது என்று கூறலாம். அவரவர் தங்கள் பணியை  சிறப்பாக செய்தனர். இளம் வீரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிரிக்கெட் டை  மகிழ்ச்சியாக கொண்டாடினர். கடைசி 2 ஓவர்கள் மிகவும் நெருக்கடியாக இருந்தது.  நாங்கள் ஸ்லோ பவுலர்களுக்கு  எதிராக வெளுத்து வாங்கினோம். ராய் மிகவும் உத்வேகமாக இருந்தார்.  சிறப்பாக பீல்டு செய்த அவர் மிகச் சிறந்த  வீரர். அவருடைய பங்களிப்பு அதிகமாக இருந்தது. அடுத்த போட்டிக்குள் நாங்கள்  மீண்டெழ விரும்புகிறோம். இன்னும் இரு நாட்களில் மற்றொரு போட்டியை மற்றொரு  அணியுடன் சந்திக்க உள்ளோம்.

அந்த அணியை வெற்றி கொள்வது சிரமம் என்றாலும்  இந்த சீசனில் அனைத்து அணிகளும் சிறந்ததாகவே இருக்கின்றன. மகிழ்ச்சியுடன்  அடுத்த போட்டியையும் சந்திக்கிறோம்.’’ என்றார். ராஜஸ்தான் அணி  கேப்டன் சஞ்சுசாம்சன் கூறுகையில், ‘‘நாங்கள் பெற்றது கவுரமான ஸ்கோர் தான்.  ஆனால் விக்கெட் மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் நன்றாக பந்து வீசினர்.  இன்னும் 10 அல்லது 20 ரன்கள் கூடுதலாக பெற்றிருக்க வேண்டும். கடைசி  ஓவர்கள் வேறுபட்டதாக இருந்தது. இடையில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து  இழந்ததால் ரன் குவிக்கும் வேகம் தடைபட்டு நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டும். எங்களுடயை விளையாட்டு தரத்தை  உயர்த்துவது முக்கிய தேவையாக உள்ளது’’ என்றார்.

நான்காவது இடத்திற்கு கடும் போட்டி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வெற்றியால் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சற்று நிம்மதியில் உள்ளனர். நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால், 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும். ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகளும் 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர். தற்போது நான்காவது இடத்தைப் பிடிக்க இந்த நான்கு அணிகளுக்குள்ளும் கடும் போட்டி நிலவுகிறது.

Related Stories:

>