பொய்வழக்கில் கைதான விவசாயிக்கு ரூ50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாஜி டிஎஸ்பி, எஸ்எஸ்ஐக்கு உத்தரவு: மனித உரிமை ஆணையம் அதிரடி

கள்ளக்குறிச்சி: பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட தியாகதுருகம் விவசாயிக்கு ஓய்வுபெற்ற டிஎஸ்பி மற்றும் சிறப்பு எஸ்ஐ ஆகியோர் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கந்தசாமி.  இருவருக்கும் நிலப்பிச்னை இருந்து வந்துள்ளது. இதுசம்மந்தமாக சங்கராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த நிலப்பிரச்னை சம்மந்தமாக இருதரப்பிற்கும் கடந்த 22.04.2016 ம்தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. கந்தசாமி தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மதிவாணன் கடந்த 23.04.2016ம் தேதி விசாரணைக்கு ராஜமாணிக்கம் அழைத்துள்ளார். விசாரணையில் ஒருதலைபட்சமாக டிஎஸ்பி செயல்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கந்தசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜமாணிக்கம் மற்றும் இவரது அக்கா குள்ளம்மாள், கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது அப்போதைய தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து ராஜமாணிக்கம் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

பின்னர் இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதுகுறித்து ராஜமாணிக்கத்தின் அக்கா  குள்ளம்மாள் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் கடந்த 26.04.2016 ம்தேதி வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜமாணிக்கத்துக்கு எழுத படிக்க தெரியாது. எங்களுடைய நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் கந்தசாமி தரப்பினர் செயல்பட்டனர். இதற்கு உடந்தையாக அப்போதைய டிஎஸ்பி (தற்போது ஓய்வு) மதிவாணன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செயல்பட்டு ராஜமாணிக்கத்திடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டு எனது கணவர் மற்றும் ராஜமாணிக்கம் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எனவே பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த 22 ம்தேதி நடைபெற்ற இறுதி விசாரணையில் பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது ஓய்வு பெற்ற டிஎஸ்பி மதிவாணன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட நபருக்கு  ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் தமிழக அரசு முதன்மை செயலாளருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Related Stories: