இது தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது!: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நாசமாகியுள்ளன. இளைஞர்களின் உயிரை குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென பல அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்‍க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், மனநல பிறழ்வு, நடத்தை மாற்றம், சமூக மற்றும் தனிநபர் வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகிய பிரச்னைகள் எழுகின்றன. எனவே இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் சூதாட்டங்களில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், ஆன்லைன் விளையாட்டுகள் என்பது தனிநபரின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை என குறிப்பிட்ட நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து உரிய நிவாரணம் தேடி இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக்கூடிய செயல் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: