பருவமழைக்கால பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை!: சென்னை புழல் ஏரி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!

சென்னை: சென்னை புழல் ஏரி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார். வழக்கமாக அக்டோபர் 20ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டும் அக்டோபர் 25ம் தேதிக்கு பின்னர் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடிய புழல் ஏரி பகுதியில் ஆய்வு நடத்தினார்.

ஏற்கனவே தலைமை செயலாளர் இறையன்பு கடந்த வாரம் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தார். தற்போது புழல் ஏரியில் நீர் இருப்பு 85 விழுக்காடு உள்ளது. எனவே கூடுதலாக மழை பெய்யும் பட்சத்தில் தண்ணீர் அதிகரிக்கும் போது எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார். 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அத்தகைய சூழல் தற்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆய்வு நடத்தப்பட்டது.

வழக்கமாக ஒவ்வொரு வடகிழக்கு பருவமழை காலத்திலும் சென்னையில் மழைநீர் தேங்குவது வாடிக்கை. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே இப்பணிகளை முடிக்கிவிட்டுள்ளார். முதலமைச்சருடன் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாதவரம் எம்.எல்.ஏ. மாதவரம் சுதர்சனம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: