வாளையாறு அணையில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்கள் மீட்பு..!!

கோவை: பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டிருக்கிறது. கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ராகுல், பிரணவ், சஞ்சய், ஆண்டோ, பூர்ண ஈஸ்வரன் ஆகிய 5 பேர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் ஏற்கனவே படித்த பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்களை சந்தித்துவிட்டு கோவை - கேரளா எல்லையில் இருக்கக்கூடிய வாளையாறு அணையில் குளித்ததாக கூறப்படுகிறது.

அச்சமயம் ஆழமான பகுதிக்கு சென்ற  சஞ்சய், ஆண்டோ, பூர்ண ஈஸ்வரன் ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இதை கண்ட மற்ற மாணவர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வாளையாறு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாளையாறு போலீசார், 20 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, படகு மூலம் நீரில் மூழ்கிய மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இரவு வரை மீட்பு பணி நடைபெற்ற போதிலும் உடல்கள் கண்டறியப்படவில்லை. இன்று காலை பூர்ண ஈஸ்வரன் உடலை மட்டும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். எஞ்சியவர்கள் உடல்களை நீண்ட நேரம் தேடியும் கண்டறியப்படாததால் கொச்சியில் இருந்து கடற்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு நீருக்கு அடியில் படம்பிடிக்கும் கேமரா உதவியுடன் 2 மாணவர்கள் உடல்களையும் மீட்டனர். தற்போது சஞ்சய், ஆண்டோ உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: